Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

காமன்வெல்த் கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும்

Print PDF

தினகரன் 16.08.2010

காமன்வெல்த் கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும்

புதுடெல்லி, ஆக.16: காமன்வெல்த் கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிக்க வேண்டும்என்று ஆளுநர் தேஜேந்திர கன்னா உத்தரவிட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் 3 ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்டுமான பணிகள் ரூ.35,000 கோடி செலவில் நடந்து வருகின்றன.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு இன்னும் 49 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான கட்டுமான பணிகள் முடியாமல் உள்ளன. ஜூலை மாதம் 15 ம் தேதிக்குள் முடிந்திருக்க வேண்டிய இந்த பணிகள் இந்த மாதம் 31 ம் தேதிக்குள் முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான கட்டுமான பணிகளை ஆளுநர் தேஜேந்திர கன்னா நேற்று பார்வையிட்டார்.

யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகம், காமன்வெல்த் விளையாட்டு போட்டி கிராமம் மற்றும் வசந்த் கஞ்ச் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் போன்ற பணிகளை தேஜேந்திர கன்னா நேரில் சென்று பார்வையிட்டார்.

வசந்த் கஞ்ச் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் 2000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. டெல்லி பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த குடியிருப்புக்கள் அனைத்தும் 3 நட்சத்திர ஓட்டல் அந்தஸ்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அமைப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புக்களில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக வரும் விளையாட்டுத்துறை தொழில் நுட்ப நிபுணர்களை தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர அக்ஷர்தாம் கோயில் அருகில் உருவாக்கப்பட்டு வரும் விளையாட்டு கிராமத்தில் 8,000 விளையாட்டு வீரர்களை தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் முழுவதையும் ஆளுநர் தேஜேந்திர கன்னா நேற்று சுற்றிப்பார்த்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்க இன்னும் 49 நாட்களே உள்ளன.அதற்கான கட்டுமான பணிகளை எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த மாத கடைசிக்குள் கட்டி முடிக்க வேண்டும்.ஆகவே கட்டுமான பணிகளை விரைவு படுத்த அந்தந்த துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் சுணக்கம் காட்டக் கூடாது. இவ்வாறு தேஜேந்திர கன்னா கூறினார்.

 

கணியூரில் கட்டுமான பணி முடிந்த கட்டடங்கள்

Print PDF

தினமலர் 16.08.2010

கணியூரில் கட்டுமான பணி முடிந்த கட்டடங்கள்

மடத்துக்குளம்: கணியூர் பேரூராட்சியில், கட்டுமான பணிகள் முடிந்த கட்டடங்கள் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளதால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகி வருகிறது. மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பல அரசு கட்டடங்கள், மேல்நிலைத் தொட்டிகள், கழிப்பிடங்கள், வணிக வளாகங்கள், கட்டுமானப்பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் திறக்கப்படாமல் உள்ளன.

மாரியம்மன் கோவில் அருகில் ரேஷன்கடை : மதிநகர் உட்பட கணியூரின் கிழக்கு பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தற்போது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று திரும்ப வேண்டியதுள்ளதால், பொது மக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில், நமக்கு நாமே திட்டத்தின் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் மாரியம்மன் கோவில் அருகில் ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை."வாம்பே ' மகளிர் சுகாதார வளாகம்: வெங்கிடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ரோடு மற்றும் வாய்க்கால் பகுதிகளை பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் கடும் துர்நாற்றத்துடன் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த நிலையை போக்க, இப்பகுதியில் 5 லட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டி, மூன்று ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு சுகாதார வளாகம் திறக்கப்படாமல், திறந்த வெளி கழிப்பிடம் என்ற அவல நிலை கணியூர் பேரூராட்சியில் தொடர்கிறது. சமுதாய நலக்கூடம்: கணியூர் பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 11 லட்சம் ரூபாய் செலவில், மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

சுகாதார கழிப்பிடம்: கணியூர் பேரூராட்சியில் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், மயானப் பகுதியில் தாராபுரம் எம்.எல்..,தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ், சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் திறக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதி மக்கள் திறந்த வெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். மேல் நிலைத்தொட்டி: மதிநகர் பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், மதிநகரில் 2 லட்சம் ரூபாய் செலவில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. கட்டி, 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குடிநீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் வீணாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் அலைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இது குறித்து செயல் அலுவலர் தாஜ்நிஷா கூறியதாவது:-செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பேற்று சில வாரங்கள் தான் ஆகிறது. 14 ஆண்டுகளாக வீணாக உள்ள தாட்கோ வணிக வளாகம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி, ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது போல், மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத கட்டடங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு, வீணாக வைக்கப்பட்டுள்ளதால் கட்டடங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் அரசு நிதி கணியூர் பேரூராட்சியில் வீணடிக்கப்பட்டுள்ளது.

 

கரூர் பஸ் ஸ்டாண்டு பிளாட்ஃபாரம்தரை ஓடு பதிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 13.08.2010

கரூர் பஸ் ஸ்டாண்டு பிளாட்ஃபாரம்தரை ஓடு பதிக்கும் பணி துவக்கம்

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் கோவை பஸ் நிற்கும் வடபுறம் பிளாட்பார்மில் தரை ஓடு பதிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் பணி மற்றும் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, கமிஷனர் உமாபதி, முன்னாள் எம்.பி., பழனிசாமி, தி.மு.., மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.நகராட்சி கமிஷனர் உமாபதி கூறியதாவது: முன்னாள் எம்.பி., பழனிசாமி நிதி உதவியில் தரை ஓடு பதிக்கும் பணி நடக்கிறது. மொத்தம் 6,000 சதுர அடி பரப்பளவில் தரை ஓடு பதிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக வடக்கு புறம் பிளாட்பார்மில் தற்போது பணி நடக்கிறது.நகராட்சி சார்பில் 1.50 லட்சம் ரூபாயும், முன்னாள் எம்.பி., சார்பாக 2.40 லட்சம் ரூபாயும் செலவிடப்படுகிறது. இதுபோல் மற்ற பிளாட்பார்மிலும் தரை ஓடு பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இரட்டை வாய்க்கால் முதற்கட்டபணி முடியும் தருவாயில் உள்ளது. ஒரு மாதத்தில் பணி முடிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு கிடைத்தால், மேற்கொண்டு திட்டம் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 155 of 238