Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பஸ் ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் வளாகம்

Print PDF

தினமலர் 05.05.2010

பஸ் ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் வளாகம்

திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அமைக்கும் பணி நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார மண்டலங்கள் தோறும், ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இதுவரை சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (வார்டு ஆபீஸ்) இல்லை. இதையடுத்து ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் முத்துப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன்மூலம் பஸ் ஸ்டாண்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கான சுகாதார நடவடிக்கையை புதிய அலுவலகத்தில் இருந்தபடி மேற்கொள்ள முடியும். இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது: பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அமைக் கும் பணி நடக்கிறது. முதல்கட்டமாக அஸ்திவாரம் தோண்டப் பட்டுள்ளது. இரண்டு தளங்களாக அமையும் இக்கட்டடத்தில் கீழ்த் தளத்தில் ஆய்வாளர் அலுவலகம், மேல்தளத்தில் கருத்தரங்க கூடம் அமைக்கப்படுகிறது. இவற்றில் கீழ்த்தள பணிகள் மட்டும் முதல் கட்டமாக நிறைவு செய்யப்படும். அடுத்தகட்ட பணிகள், அதன்பின் துவங்கும், என்றனர்.

Last Updated on Wednesday, 05 May 2010 06:07
 

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முதலீடு

Print PDF

தினமணி 03.05.2010

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முதலீடு

புதுச்சேரி, மே 2: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முதலீடு செய்யப்படும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி அளித்த பதில்:

10-வது ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.08 சதவீதத்தில் இருந்தது. தற்போது 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 7.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய திட்டக்குழுவின் ஆரம்ப மதிப்பீட்டின்படி 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மின்சக்தித் துறையில் உத்தேசிக்கப்பட்ட முதலீடு இலக்கு ரூ.1,83,507 கோடிக்கு மாறாக முதல் 2 ஆண்டுகளில் ரூ.2,28,227 கோடியும் அதே போல சாலைகள் மற்றும் பாலங்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் முதலீடு இலக்கு ரூ.1,06,611 கோடிக்குப் பதிலாக முதல் 2 ஆண்டுகளில் ரூ.90,849 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேலும் துறைகளுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் முதலீடு இலக்கு ரூ.27,231 கோடிக்குப் பதிலாக முதல் 2 ஆண்டுகளில் ரூ.12,090 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் மின்சாரம்,சாலைகள், பாலங்கள் மற்றும் துறைகளுக்காக முறையே ரூ.6,58,630 கோடி, ரூ.2,78,658 கோடி மற்றும் ரூ.40,647 கோடி திருத்தி அமைக்கப்பட்ட முன்திட்ட முதலீடு ஆகும்.

11-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த முதலீடு ரூ.20,54,205 கோடி ஆக திருத்தப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு, தனியார், பொதுநிறுவனம் மற்றும் தன்னார்வதொண்டு நிறுவனங்களிடையே கூட்டுறவை வலிமையுள்ளதாகவும், தனியார் பங்களிப்பின் மூலம் 30 சதம் நிதி கட்டமைப்புக்கு ஒதுக்கப்படலாம் என்று 11-வது ஐந்தாண்டு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. ஜவாஹர்லால் நேரு நகர வளர்ச்சித் திட்டம் மூலம் 2001 மக்கள் தொகை கணக்குப்படி 10 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்

 

திருச்செங்கோட்டில் ரூ.113.75 கோடியில் பாதாள சாக்கடை

Print PDF

தினமணி 30.04.2010

திருச்செங்கோட்டில் ரூ.113.75 கோடியில் பாதாள சாக்கடை

திருச்செங்கோடு, ஏப்.29: திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.113.75 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் ஆர்.நடேசன் தெரிவித்தார்.

திருச்செங்கோடு நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அவர் கூறியது:

பாதாள சாக்கடைக்கான திட்ட அறிக்கை குடிநீர் வடிகால் வாரியத்தால் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தால் இந்தத் திட்டம் சுமார் 30-36 மாதங்களில் நிறைவேறும். அப்போது, அனைத்து வீடுகளின் கழிவு நீரும் சேகரிக்கப்பட்டு சந்தைப்பேட்டைக்கு கொண்டு வரப்படும். பின்னர் பம்ப் செய்யப்பட்டு கூட்டப்பள்ளியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். சுத்திகரிக்கப்பட்ட நீர் கூட்டப்பள்ளி ஏரியில் விடப்படும். இதன் மூலம் 33 வார்டுகளிலும் உள்ள 30 ஆயிரம் வீடுகள் பயன்பெறும். தேர்வு நிலை நகராட்சியான இதன் மக்கள் தொகை 80 ஆயிரம்.

திருச்செங்கோட்டில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க சீத்தாராம்பாளையம் மாரியம்மன் கோயில், செங்கோடம்பாளையம், எட்டிமடைப்புததூர், கோம்பை நகர், நெசவாளர் காலனி, சூரியம்பாளையம் 3-வது தெரு, கூட்டப்பள்ளி அருந்ததியர் தெரு, சூரியம்பாளையம் காட்டு வளவு, சின்னான்கிணறு, வாலரைகேட் கொக்கராயன்பேட்டை சாலை, எஸ்என்டி சாலை, வடக்கு ரத வீதி, நாடார் தெரு, காமாட்சியம்மன் கோயில் சந்து, 19-20 மற்றும் 26-வது வார்டுகளில் தலா ரூ.3 லட்சம் செலவில் புதிதாக குழாய்க்கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்த நகராட்சி தீர்மானித்துள்ளது என்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

சரவண சுந்தரம்: எனது வார்டில் பணிகள் பாதியில் நிற்கின்றன. அவற்றை முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் நடேசன்: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் ஒப்பந்ததாரர்கள் வேலைகளை முடிக்க சிரமப்படுகின்றனர். புதிய டெண்டர்களையும் எடுக்க வருவதில்லை. ஒப்பந்ததாரரிடம் பேசி வேலைகளை முடிக்க உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

டி.என். பரமசிவம்: ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வீர ஆஞ்சநேயர் கோயில் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு காற்றாலை அமைத்தால்

நகர மக்களுக்கு வேண்டிய மின்சாரம் கிடைககும். நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் நடேசன்: காற்றாலை சுமார் 26 அடி உயரம் இருக்கும். அதனை அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியுமா என்பது தெரியவில்லை.

இருப்பினும் இது குறித்து பரிசீலனை செய்யலாம்.

மாணிக்கம்: போக்குவரத்து நெரிசலைப்போக்க வட்டப்பாதை அமைக்க வேண்டும்.

தலைவர் நடேசன்: ஏற்கெனவே நாமக்கல்-ராசீபுரம் சாலையை மலை சுற்றுப்பாதை வழியாக ஈரோடு சாலைவுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. படிப்படியாக இதனை நிறைவேற்றலாம்.

டி.என். ரமேஷ்: மலைக்குச் செல்லும் பக்தர்களை சில போலி மாந்தீகர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து தோஷம் கழிக்கிறேன் என்று கூறி ஆயிரக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றுகின்றனர்.

தலைவர் நடேசன்: பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆணையர் இளங்கோ, பொறியாளர் ரவி முன்னிலை வகித்தனர். பாவாயி, மாதேஸ்வரன், முத்துசாமி, விசாலாட்சி, ஈஸ்வரன், தமிழ்செல்வி, ராஜவேலு, சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பேசினர்.

கோவையில் வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

கோவை, ஏப்.29: கோவையில் வாகன நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்றுமிடங்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள வாகன நிறுத்த மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் உள்ள வாகன நிறுத்தமிடங்கள், கட்டண கழிப்பிடங்கள் ஆகியவற்றில் மாநகராட்சி நிர்ணயித்த தொகை தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அறிவிப்பு பலகை வைக்காத ஒப்பந்ததாரர்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 


Page 179 of 238