Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கட்டமைப்புப் பணிகளை ஒரு மாதம் முன்பே முடிக்க வேண்டும்

Print PDF

தினமணி 25.01.2010

கட்டமைப்புப் பணிகளை ஒரு மாதம் முன்பே முடிக்க வேண்டும்

கோவை, ஜன.24: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி அடிப்படை கட்டமைப்புப் பணிகளை ஒரு மாதத்துக்கு முன்பே முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ரெசிடென்சி ஹோட்டலுக்குச் சென்ற அவர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடக்கும் சாலைப் பணிகள் மற்றும் இதரப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இதற்குப் பதிலளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியது: மாநாட்டையொட்டி, 96 கி.மீ. தூரத்துக்கு 17 சாலைகள் ரூ.60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சாலை விரிவுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மாநாடு நடக்கும்போது வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாவட்ட எல்லையில் தாற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார்.

"சிறைச்சாலை வளாகத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு 50 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கட்டடங்களை இடிப்பது தொடர்பாக அரசிடம் தெரிவித்து, இதர நிலங்களும் பூங்காவில் சேர்க்கப்படும்' என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்.

"மாநகராட்சி சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணிகள் விரைவில் முடிவடையும். அதன்பின், காந்திபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

அவிநாசி சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. மொத்தம் 28 கோபுர விளக்குகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள அனைத்துப் பூங்காக்களையும் அழகுபடுத்தும் பணி துவங்கி உள்ளது' என்றார் மேயர் ஆர்.வெங்கடாசலம்.

மாநாட்டையொட்டி, தண்ணீர் அதிகளவில் தேவைப்படும். ஆகவே, வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என மு..ஸ்டாலின் கேட்டார்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் அளித்த பதில்: வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் 85 சதவிகித பணிகள் நிறைவடைந்தன. நெல்லித்துறையில் இருந்து 6 கி.மீ. தூரம் உள்ள செல்லப்பனூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இப் பணிகள் மார்ச் 31}ம் தேதிக்குள் முடியும்.

கொடிசியா வளாக அரங்கில் 20}க்கும் மேற்பட்ட ஆய்வரகங்கள் நடைபெற உள்ளது. ஒரு அரங்கில் இருந்து மறு அரங்கிற்கு அறிஞர்கள் செல்வதற்கு மூடிய நடைபாதை அமைக்கப்படுகிறது. மேலும், கொடிசியா சாலைக்கு அருகே உள்ள பள்ளமான இடத்தை மணல் போட்டு மூட பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

ஹோப்காலேஜ் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் ரூ.7 கோடி செலவில் சப்வே அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

அவிநாசி சாலை, திருச்சி சாலையில் ரூ.55 கோடி மதிப்பில் தரைக்கடியில் கேபிள் வழியாக மின்வயர்கள் அமைக்கும் பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது என்றார்.மாநாட்டையொட்டி, அடிப்படை கட்டமைப்புப் பணிகள் உள்பட அனைத்துப் பணிகளையும் ஒரு மாதத்துக்கு முன்பே முடிக்க அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Last Updated on Monday, 25 January 2010 06:43
 

பட்டு வாரியம்-எலக்ட்ரானிக் சிட்டி இடையே ரூ.880 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இன்று திறப்பு

Print PDF

தினமணி 22.01.2010

பட்டு வாரியம்-எலக்ட்ரானிக் சிட்டி இடையே ரூ.880 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் இன்று திறப்பு

பெங்களூர், ஜன.21: பெங்களூர் மடிவாளா பட்டு வாரிய சந்திப்பு -எலக்ட்ரானிக் சிட்டி இடையே ரூ.880 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9.5 கி.மீ. தூர விரைவு மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

நகரில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கு காலை, மாலை நேரங்களில் ஒசூர் சாலையில் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகிறது.

ரயிலில் சென்றால் இந்த ஒரு மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து ஒசூருக்கே சென்றுவிடலாம். அந்த அளவுக்கு இந்தச் சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மடிவாளா பொம்மனஹள்ளி அருகே உள்ள பட்டு வளர்ச்சி வாரிய சந்திப்பில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை 9.5 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை கொண்ட அதிவிரைவு மேம்பாலம் கட்ட அரசு முடிவெடுத்தது.

இந்த மேம்பாலம் கட்டும் பணி 2006-ம் ஆண்டில் துவங்கியது. 2008-ல் முடிய வேண்டிய இப்பணி 15 மாத கால தாமதத்திற்கு பிறகு ஜனவரியில் முடிவடைந்துள்ளது.

நாட்டிலேயே மிக நீளமான 2-வது மேம்பாலமாக இது பெயர்பெற்றுள்ளது. இதை பெங்களூர் எலிவேட்டட் டோல்வே நிறுவனம் கட்டியுள்ளது.

இந்த பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்தால் 15 நிமிடங்களில் எலக்ட்ரானிக் சிட்டிக்கு சென்றுவிடலாம்.

கீழ்ப்பகுதியில் உள்ள சாலையில் ஏற்படும் வாகன நெரிசல் கணிசமாகக் குறையும். இந்த பாலத்தை மத்திய தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் வெள்ளிக்கிழமை திறந்து வைக்க உள்ளார்.

சிறிது காலம் மட்டும் இந்த மேம்பாலத்தில் இலவசமாக பயணிக்கலாம். பாலத்தை பயன்படுத்த பயன்பாட்டு கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் அதற்குமேல் பயன்படுத்தினால் ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். கார், ஜீப், வேன் போன்றவை ரூ.30-ம், இலகு ரக வாகனங்கள் ரூ.40-ம், சரக்கு வாகனங்கள், பஸ்கள், ரூ.85-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மேம்பாலத்தால் ஒசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இந்த பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. இன்டர்செப்டார் வாகனங்கள், நவீன கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படும்.

போக்குவரத்து போலீஸôரும் இப்பணியில் ஈடுபடுவார்கள் என்று நகர காவல் துறை (போக்குவரத்து) கூடுதல் ஆணையர் பிரவீன் சூட் தெரிவித்தார்.

Last Updated on Friday, 22 January 2010 11:04
 

நிறைவடைந்தது சாக்கடை கட்டுமானப் பணி

Print PDF

தினமணி 21.01.2010

நிறைவடைந்தது சாக்கடை கட்டுமானப் பணி

கோவை, ஜன.20:"தினமணி' செய்தியைத் தொடர்ந்து சாயிபாபாகாலனி கே.கே.புதூரில் பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கட்டுமானப் பணி நிறைவடைந்தது.

கே.கே.புதூர் மணியம் வேலப்பர் வீதியில் சாலையோர சாக்கடை அமைக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, சாலையின் குறுக்கே செல்லும் சாக்கடையின் கட்டுமானப் பணி ஆரம்பமானது. இந்த சாக்கடை மீது முழுமையாக கான்கீரிட் போட்டு மூடப்படவில்லை எனவும், கட்டுமானப் பணி துவங்கிய நாள் முதல் அவ் வழியே மினி பஸ்கள் இயக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி "தினமணி'யில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக சாக்கடை மீது முழுமையாக கான்கீரிட் போடும் பணி முடிக்கப்பட்டது. இவ் வழியே மீண்டும் மினி பஸ்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் கே.கே.புதூர் மக்கள்.

ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு பிப்.10-ல் 4-ம் கட்ட ஏலம் ஒசூர், ஜன.20: ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு பிப்.10-ல் 4-ம் கட்ட ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூர் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு 2008 நவ.28-ல் தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7.49 கோடி நிதியில் பஸ் நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2 முறை வரைபடத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் கால தாமதம் ஆனது. பிறகு மேலும் ஒரு கோடி நிதியில் பஸ் நிலையம் முழுவதும் சிமென்ட் தரைத்தளம் போட தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் துரு பிடிக்காத இரும்பு கம்பிகள் பதிக்க மேலும் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்பொழுது ரூ.10 கோடி நிதியில் ஐடி கட்டடம் போல பஸ் நிலையம் உருவாகி வருகிறது.

இந்த நிதி முழுவதும் தமிழக அரசின் டிபிட்கோ நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று கட்டப்பட்டு வருகிறது. பின்னர் பஸ் நிலையத்தில் கிடைக்கும் கடை வாடகை, பஸ் நுழைவு வரி, கழிப்பிடக் கட்டணம் உள்ளிட்ட வருவாய் மூலம் ஒசூர் நகராட்சி இந்த நிதியை திருப்பி செலுத்த வேண்டும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் கடைக்கான ஏலம் 3 முறை நடத்தப்பட்டது. இதில் 70 கடைகளுக்கு ஏலம் விட்டதில் கீழ் தளத்தில் உள்ள 17 கடைகள் மட்டும் ஏலம் போனது. தற்பொழுது பிப்.10-ல் 4-ம் கட்ட ஏலம் ஒசூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 21 January 2010 10:54
 


Page 210 of 238