Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூக்கடைக்கான லைசென்ஸ் ஹோட்டலுக்குப் பயன்பாடு சாலையோர உணவகங்களால் சுகாதாரச் சீர்கேடு!

Print PDF

தினமணி 05.05.2010

பூக்கடைக்கான லைசென்ஸ் ஹோட்டலுக்குப் பயன்பாடு சாலையோர உணவகங்களால் சுகாதாரச் சீர்கேடு!

மதுரை, மே 4: மதுரையில் பூக்கடை நடத்த லைசென்ஸ் பெற்றுவிட்டு ஹோட்டல் போன்ற உணவகங்களைப் பலர் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான உணவு விடுதிகள் உள்ளன. இவை நடுத்தர மற்றும் சிறிய உணவகங்களாகும். மேலும், இரவு நேரங்களில் சாலையோரங்களில் 500-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கான லைசென்ஸ் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு 45 நாள்களுக்கு முன்பே லைசென்ஸýக்கான பணத்தை மாநகராட்சி கருவூலத்தில் கட்ட வேண்டும்.

அவ்வாறு கட்டிய பணத்துக்கான ரசீதின்படி வார்டு சுகாதார ஆய்வாளர் உணவகத்தை அவை விதிப்படி அமைக்கப்பட்டிருக்கிறதா? என ஆய்வு செய்வார். ஆய்வின் அறிக்கைப்படி உணவகங்களுக்கான லைசென்ஸ் அளிக்கப்படுகிறது.

ஆனால், மதுரையில் அதிகாரிகள் இந்த நடைமுறையை ஓழுங்காகப் பின்பற்றுவதில்லை. முறையாக ஆய்வும் செய்வதில்லை. இதனால், பூக்கடை உள்ளிட்டவற்றுக்கு லைசென்ஸ் பெற்றவர்கள் கூட உணவகங்களை நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சிறிய உணவகங்களில் உணவைத் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும், அதை பரிமாறும் நபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பதையும் காணமுடிகிறது. சிறிய ஹோட்டல்கள் பலவற்றில் கைகழுவும் தண்ணீரே குடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மதுரைக்கு நாள்தோறும் வரும் வெளியூரைச் சேர்ந்த நடுத்தர மக்கள் இத்தகைய உணவகங்களில்தான் சாப்பிடும் கட்டாயத்தில் உள்ளனர். அவ்வாறு சாப்பிடுவோர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைக்கு ஆளாகி சிகிச்சையும் எடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், உணவகத்தில் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் விசாரணைக்கு அழைப்பார்களோ எனப் பயந்து புகார் கொடுக்க முன்வருவதில்லை.

நகரில் இரவு நேரத்தில் உள்ள சாலையோர உணவகங்களால் பாதையோரத்திலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையிலேயே செயல்படுகின்றன.

இதுபோன்ற கடையில் உணவருந்திய நிலையில்தான் புதுச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர் இசையமுதன் இறந்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகையா, போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், ஆர்.டி.ஓ. சுகுமாறன், உணவு ஆய்வாளர்கள் சரவணன், ராஜா, ஜெகதீசன் உள்ளிட்டோர் உணவகங்களுக்கு சீல் வைத்தனர்.

மதுரை ரயில் நிலையம் முன் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சோதனை முடிவுகள் வந்தபிறகு குறிப்பிட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோரிக்கை: மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் குழுத் தலைவரான கவுன்சிலர் சுப்புராமன் கூறுகையில், சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.