Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்படப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 06.05.2010

கலப்படப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

மதுரை, மே 5: கலப்படமான, தரக்குறைவான, காலாவதியான பொருள்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உணவுப் பொருள்கள், தானியங்கள், பிஸ்கட், தேயிலைத் தூள், சாக்லெட், சோப்பு, பவுடர் போன்ற அழகுசாதனப் பொருள்கள் அனைத்திலும் பொட்டலப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணை 1975, விதி எண் 5}ன் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, எடை, அதிகபட்ச விற்பனை விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதியாகும் தேதி முதலியனவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடாத பொட்டலப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்படும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான பொருள்களை கடைகளிலிருந்தும், கிடங்கிலிருந்தும் உடனடியாக அகற்றி அழிக்க வேண்டும். அவ்வாறு அழிப்பதற்குப் பதிலாக அவற்றை சட்டவிரோதமாக சிறு வணிகர்களிடம் விற்பனை செய்தால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 273}ன் கீழும், உணவு கலப்படச் சட்டம் 1954 பிரிவு 7}ன் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான, கலப்படப் பொருள்களை விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள், சிறு வணிகர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படுவதுடன், நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலமாக அபராதம் விதிக்கவும், தடைவிதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தரக்குறைவான, கலப்பட, காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் பொட்டலப் பொருள்களை யாரேனும் விற்பதாகத் தெரியவந்தால் அது பற்றி பொதுமக்கள் மாவட்ட நுகர்வோர் சேவைக் குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு தொலைபேசி எண்கள் (0452) 2532501, 2532503, 2532504, 2532505 மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.