Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓட்டல், கடைகளில் உணவு பொருட்கள் போலி: 'காலாவதி' ஆய்வில் வெட்ட வெளிச்சம்

Print PDF

தினமலர்     12.05.2010

ஓட்டல், கடைகளில் உணவு பொருட்கள் போலி: 'காலாவதி' ஆய்வில் வெட்ட வெளிச்சம்

சிவகங்கை: மாவட்டம் முழுவதும் நேற்று, ஓட்டல், கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். பிரபல குளிர்பான நிறுவன பாட்டில்களில், அதே நிறத்தில் 'எசன்ஸ்' நிரப்பி விற்றது தெரியவந்தது. கடைகளில் காலாவதி உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நேற்று, ஓட்டல்; பெட்டி கடை; ஐஸ், சோடா தயாரிப்பு ஆலைகளில் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் அதிகாரிகள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு, போலி, காலாவதி பொருட்கள் இருந்தன. சிவகங்கை ஆசாத் தெருவில் உள்ள சோடா ஆலையில், பிரபல குளிர்பான நிறுவன பாட்டில்களில், தேவையான நிறங்களில் 'எசன்ஸ்' நிரப்பி விற்றது தெரியவந்தது. இங்கு, 10 க்கும் மேற்பட்ட 'கிரேடு' களில் குளிர்பானம், அதற்கான 'எசன்ஸ்' பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள சோடா ஆலைகளில், இந்த 'கூத்து' நடக்குமோ என, சந்தேகிக்கப்படுகிறது.

இளையான்குடி: வட்டார மருத்துவ அலுவலர் ராம்குமார், தாசில்தார் சண்முகசுந்தரம், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சரவணக்குமார், உணவு ஆய்வாளர் ராஜேந்திரன் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மானாமதுரை: மருத்துவ அலுவலர் செந்தில் செல்வி, தாசில்தார் மணி, பேரூராட்சி செயல் அலுவலர் சஞ்சீவி, உணவு ஆய்வாளர் முத்துராமலிங்கம், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை சோதனை நடத்தினர். 5,000 மதிப்புள்ள காலாவதி பொருட்களை கைப்பற்றினர்.

முற்றுகை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்னர். எஸ்.., முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் சமரசம் செய்தனர். எதிர்ப்பால், ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது. மதியம் 3.30 மணிக்கு, தாசில்தார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 'குடிசை தொழில் தயாரிப்புகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. இதன் உற்பத்தியாளர்களை விடுத்து, எங்களை மிரட்டுகின்றனர்,' என வர்த்தகர்கள் புகார் தெரிவித்தனர்.

காரைக்குடி: காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், புதுவயலில் சோதனை நடந்தது. பெரும்பாலான ஓட்டல்களில் ஊசிப்போன பரோட்டா, 'பிரிட்ஜ்' ல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன், மட்டன் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்துவிளக்கு, சுப்பிரமணியபுரத்தில் கெட்டுப்போன சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி: சுகாதார அலுவலர் ஜெயக்கண்ணன், ஆய்வாளர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர். ஓட்டல்களில் ஏழு நாட்களில் சுகாதாரத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் அழிக்கப்பட்டன.

திருப்புத்தூர்: மாவட்ட பூச்சியியல் நிபுணர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில் குமார், உணவு ஆய்வாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ் ஆய்வு நடத்தினர். 6,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவகோட்டை: நகர் நல அலுவலர் டாக்டர் செந்தில்ராஜ், தாசில்தார் சரோஜா ஆய்வு நடத்தினர். 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடத்தில் புகைபிடித்து இருவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அச்சம்: கோடை வெப்பத்தை தணிக்க, பிரபல நிறுவனங்களின் குளிர்பானத்தை அதிகம் விரும்பி அருந்துவர். ஆனால், இதில் போலிகள் புழக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு வகைகளில் போலிகளை தடுக்க சுகாதார துறையினர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 1.10 லட்சம் பொருள் அழிப்பு: நேற்று மாவட்டத்தில் உள்ள 350 க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த ஆய்வில், 1.10 லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணை இயக்குனர் (சுகாதாரம்) ரகுபதி கூறுகையில், ''தொடர்ந்து இப்பொருட்களை விற்கும் கடையினர் மீது, உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Wednesday, 12 May 2010 10:13