Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரினால் வயிற்றுப்போக்கு பரவவில்லை: ஆணையர்

Print PDF

தினமணி    12.05.2010

குடிநீரினால் வயிற்றுப்போக்கு பரவவில்லை: ஆணையர்

போடி, மே 11: போடியில் குடிநீரினால் வயிற்றுப்போக்குப் பரவவில்லை என ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார். போடியில் வயிற்றுப்போக்கினால் கடந்த சில தினங்களாக பலர் பாதிக்கப்பட்டு, வெளி நோயாளிகளாகவும், அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். செவ்வாய்க்கிழமை, வயிற்றுப்போக்கு, வாந்தியினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பாலுச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், மெர்லி வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பழைய ஆஸ்பத்திரி தெருவில் இறந்த மாட்டிறைச்சி சில தினங்களாக இருப்பு வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரையும் சோதனை செய்தனர்.

மேலும், பொதுமக்களிடம் கொட்டகுடி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. எனவே, தண்ணீரைக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். இறந்த மாட்டிறைச்சியை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறித்தினர்.

இதுகுறித்து ஆணையர் சரவணக்குமார் கூறியது:

போடி நகராட்சியில் குடிநீர் குளோரினேசன் முறைப்படி செய்து விநியோகம் செய்து வருகிறோம். தற்போது மலைப் பகுதியில் மழை பெய்ததால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. வயிற்றுப்போக்கு பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ததில், அவர்களில் சிலர் இறந்த மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதும், சுகாதாரக் கேடான குளிர்பானங்களைச் சாப்பிட்டதும் காரணம் எனத் தெரிய வருகிறது.

போடி நகரில் விநியோகிக்கப்படும் குடிநீரை தூய்மையாக வழங்கி வருகிறோம். குடிநீர்ப் பிரச்னையினால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஒரே பகுதியில் பலரை பாதிக்கும்.

எனவே, போடி பகுதியில் குடிநீரினால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பில்லை. வயிற்றுப்போக்கு பாதித்த பகுதிகளில் சுண்ணாம்பு தூள் தெளித்தல், சாக்கடை தூர்வாருதல், வீடுகளில் சென்று தடுப்பு மருந்துகள் அளித்தல் போன்ற பணிகள் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.