Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூர், களக்காட்டில் காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி    14.05.2010

கடையநல்லூர், களக்காட்டில் காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல்

களக்காடு, மே 13: களக்காட்டில் காலாவதியான உணவுப் பொருள்களை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழகம் முழுவதும் கடைகள், உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு காலாவதியான உணவுப் பொருள்களை அழித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.. மீராமுகைதீன் உத்தரவின் பேரில், களக்காட்டில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறையினர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாகுல்ஹமீது தலைமையில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

களக்காடு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 39 கடைகளில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன், உணவு ஆய்வாளர் சிங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராமசுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன், பிரேம் ஆனந்த், சிதம்பரம், அங்குசாமி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், சமையல் பொருள்கள் உள்ளிட்ட ரூ.15,000 மதிப்புள்ள உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்த சுகாதாரத்துறையினர், இவற்றை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மைக் கூடத்திற்குக் கொண்டு சென்று அங்கு தீயிட்டு அழித்தனர்.

விக்கிரமசிங்கபுரம், பாபநாசத்தில் வியாழக்கிழமை காலாவதியான உணவுப் பொருள்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதியில் வைராவிகுளம் வட்டார மருத்துவ அலுவலர் என்.எம்.எஸ். அகமது தலைமையில் டாக்டர் ஆதிநாராயணன், உணவு ஆய்வாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் சரபோஜி, திருப்பதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் டீக்கடை, பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் காலாவதியான குளிர்பானங்கள் போன்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். ரூ. 10,000 மதிப்புள்ள உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இரண்டு தினங்களாக ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் மற்றும் காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

கடையநல்லூர் நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையாபாஸ்கர், கைலாசசுந்தரம் மற்றும் பணியாளர்கள் கடையநல்லூர் பஸ் நிலையம், பண்பொழி சாலை, பிரதான சாலை, பேட்டை மலம்பேட்டைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பழக்கடைகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்கள், காலாவதியான பொருள்கள், மெழுகு ஆப்பிள்கள், கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.