Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான பொருள்கள் விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி      17.05.2010

காலாவதியான பொருள்கள் விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை

சிவகாசி, மே 16: காலாவதியான பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது செய்தி குறிப்பு: ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் காலமும், தேதியும் பொட்டலத்தில் குறிப்பிட வேண்டும் என எடை மற்றும் அளவுகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டால், தயாரிப்பாளர் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை விலை, எடை, உற்பத்தியாளர் பெயர், முகவரி ஆகியவை இல்லாத பொருள்கள் விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறும் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான பொருள்கள் கடையிலோ, கிட்டங்கியிலோ இருந்தால் அவற்றை அழித்துவிட வேண்டும்.

இதனைச் செய்யத் தவறும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 273-ன் கீழும், உணவு கலப்பட தடைச் சட்டம் 1954-ன் கீழ் உள்ள பிரிவு 7-ன் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இவ்வாறு சட்ட விரோதமாகவும், சமூகத்தின்பால் அக்கறையில்லாமல் எதிர்கால சந்ததியினரின் உடல் நலத்தினை கருத்தில் கொள்ளாமலும், காலாவதி ஆகிய உணவு மற்றும் இதர பொருள்களை அழிக்காமல் விற்பனை செய்யும் பொரிய நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படும்.

சட்ட விராதமாக செயல்படும் நிறுவனங்களிடமிருந்து நுகர்வோருக்கு உடல்நலக் குறைவு போன்ற பாதிப்புக்களுக்கான நஷ்டஈட்டை கணக்கிட்டு வசூலிக்கவும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிடலாம்.

காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்தால் மாநில நுகர்வோர் சேவை மையத்திற்கு 044-28592828 என்ற தொலைபேசி மூலம் புகார் அல்லது தகவல் அளிக்கலாம். மேலும் இது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம்.