Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான உணவுப்பொருட்களைவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை:திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர்      17.05.2010

காலாவதியான உணவுப்பொருட்களைவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை:திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர்:காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் (பொ) தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் காலாவதியான பொருட்கள் குறிப்பாக உணவுபொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விற்பனையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உணவு பொருளுக்கும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் காலம் பொட்டலத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்று எடை மற்றும் அளவுகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவரங்கள் இல்லாத பொட்டலமிடப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர், விற்பனையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொட்டலப் பொருட்கள் ( ஒழுங்குமுறை) ஆணை 1975 விதி 5ன்கீழ் உற்பத்தி தேதி, அதிகபட்ச விற்பனை விலை, எடை, உற்பத்தியாளர் பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடாத பொட்டலப்பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்யப்படும் பொட்டலப்பொருள்களை காலாவதி தேதிக்கு பிறகு கடைகளில் இருந்தும், கிடங்குகளில் இருந்தும் அகற்றி அதை அழித்துவிட வேண்டும். இவ்வாறு அழிக்கப்பட வேண்டிய காலாவதியான உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல் சட்டவிரோதமாக அவற்றை சிறு வணிகர்களிடம் விற்று விடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இத்தகைய செயல்களில் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் காலாவதியான பொருள்களை அழிக்க தவறும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 273 ன் கீழும், உணவு கலப்பட தடைச்சட்டம் 1954ன்கீழ் உள்ள பிரிவு 7ன் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சட்டவிரோதமாக காலாவதியான உணவு மற்றும் பிற பொருள்களை அழிக்காமல் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள், சிறு வணிகர்கள் மீது கலெக்டர் வாயிலாக நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 1986ன் பிரிவு 12(டி)ன் கீழ் வழக்கு தொடரப்படும்.

இந்த சட்டப்பிரிவு 14 (1) (ஜி) ன் கீழ் சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு போன்ற பாதிப்புகளுக்கான நஷ்ட ஈட்டை கணக்கிட்டு வசூலிக்கவும் நுகர்வோர் குறைதீர்மன்றங்கள், மாநில நுகர்வோர்குறைதீர் ஆணையம் உத்தரவிடலாம்.தரக்குறைவான அல்லது காலாவதியான பொட்டல பொருள்களை விற்பனை செய்வதாக தகவல் அறிந்தால் மாநில நுகர்வோர் சேவைமையம் தொலைபேசி எண் 044-28592828 ல் புகார் அல்லது தகவல் அளிக்கலாம். மேலும் இது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவரான திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கலாம்.