Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலித்தீன் பேப்பரில் உணவு பொட்டலம் : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமலர்       15.05.2010

பாலித்தீன் பேப்பரில் உணவு பொட்டலம் : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறையின் வேகம் ஆமையை விட மோசமாக உள்ளது. திடீர், திடீரென ஆய்வு செய்தாலும், அதனால் பலன் கிடைப்பதில்லை. 20 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடரவே செய்கிறது. தற்போது, உணவு பொருட்கள் தயாரிக்கக்கூட, மெலிதான பாலித்தீன் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. இனியும் தாமதிக்காமல், சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் நகரம், பனியன் தொழிலை சார்ந்த நகரம். இத்தொழில் மற்றும் இத்தொழிலை சார்ந்த மற்ற நிறுவனங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகமானோர். தொழிலாளர்களில் குடும்பத்தோடு தங்கியிருப்பவர்களுக்கு உணவு பிரச்னை எழுவதில்லை.

'பேச்சிலராக' ரூம் எடுத்து தங்கியிருப்போருக்கு மூன்று வேளை உணவு பிரச்னை பூதாகரமாக எழுகிறது.தரமான உணவு சாப்பிட வேண்டுமென விரும்புவோர், நாளொன்றுக்கு 100 ரூபாய் (காலை ரூ.30 + மதியம் ரூ.40 + இரவு ரூ.30) என செலவிட வேண்டும். அசைவ உணவு சாப்பிட விரும்புவோர், மேலும் 100 ரூபாய் செலவிட வேண்டும். நாளொன்றுக்கு உணவுக்காக பெருந்தொகை செலவு செய்ய விரும்பாதவர்கள், ஆங்காங்கே நடத்தப்படும் மெஸ்களில் சாப்பிடுகின்றனர். அவற்றில் சப்ளை செய்யப்படும் உணவு தரம், குறைவாக இருக்குமென்று வெளிப்படையாக தெரிந்திருந்தாலும் கூட, பணத்தை செலவிட யோசித்து, அந்த உணவையே சாப்பிடுகின்றனர்.மெஸ்கள் மற்றும் பேக்கரி, டீக்கடைகளில் குறைந்த விலைக்கு பொட்டலச் சாப்பாடுகள் விற்கப்படுகின்றன. லெமன், தக்காளி, தயிர் சாதம் என ஊறுகாய் மட்டும் இணைத்து பொட்டலச் சாப்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஒரு பொட்டலம் 15 ரூபாய் என விற்கின்றனர். 'சைடிஷ்' எதுவும் இருப்பதில்லை. இதேநேரத்தில், பொட்டலம் போடுவதற்கு, வாழை இலை பயன்படுத்துவதில்லை. மெலிதான பாலித்தீன் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது.

இது, உடலுக்கு கேடானது.சூடான உணவு பதார்த்தங்களை, மெலிதான பாலித்தீன் பேப்பரில் பார்சல் செய்கினறனர். உணவு பொருட்களின் வெப்பத்தை தாங்காமல், பாலித்தீன் கவர் இளகி, உணவோடு கலக்கும்; அவை, வெளிப்படையாக தெரியாது. 20 மைக்ரானுக்கு குøறான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை, மாநகராட்சி நிர்வாகம் தடை செய்துள்ளது.அதுதொடர்பாக, வியாபாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், அதன் பயன்பாடு தொடர்கிறது. மாநகராட்சி சுகாதாரத்துறையினர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வோரை அழைத்து ஆலோசிக்க வேண்டும்; 20 மைக்ரானுக்கு உட்பட்ட பொருட்களை விற்றால், எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக, எச்சரிக்கை விட வேண்டும்; குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்; அதன்பின், ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகமே, மேயர் தலைமையில் களமிறங்கி, அனைத்து வார்டுகளிலும் குரூப்பாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, வியாபாரிகளிடம் மிரட்சி ஏற்படும்;

அதன்பின், அப்பொருட்களை விற்கவே பயப்படுவர். வாய்மொழியாக மட்டும் சொல்லிக் கொண்டேயிருந்தால், பிரயோஜனப்படாது.அதேபோல், உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யும் மெஸ்கள் மற்றும் பேக்கரி, டீக்கடைகளுக்கும் எச்சரிக்கை விட வேண்டும்; பாலித்தீன் பேப்பர்களுக்கு பதிலாக, வாழை இலை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்; இல்லையெனில், வார்டு வாரியாக ஆய்வு செய்து, அபராதம் விதிக்க வேண்டும். சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட, மேயரும், மாநகராட்சி கமிஷனரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அறிவுறுத்த வேண்டும்.