Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீராதாரங்களில் கலக்கும் கழிவு நீர்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி         18.05.2010

நீராதாரங்களில் கலக்கும் கழிவு நீர்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

தேனி, மே 18: குடிநீராதாரங்களில் கழிவு நீர் கலக்கும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் கூறினார்.

தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் அதிக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

உத்தமபாளையம் குடிநீரேற்றும் நிலையத்தில் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மேற்பார்வையில், குடிநீரை குளேரினேசன் செய்து விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வயிற்றுப் போக்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குடிநீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உள்ளாட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீராதாரப் பகுதிகளில் கலப்பதை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீராதாரப் பகுதிகளில் கழிவுநீர் கலந்தும், குப்பைகளை கொட்டியும் மாசு ஏற்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திறந்தவெளி கழிப்பிடங்களால் நோய் தொற்று ஏற்படுóம் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை அமைக்க முன்வர வேண்டும். ஊராட்சிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை முறையாக பராமரித்து பயன்படுத்த வேண்டும்.

கழிப்பறையை பயன்படுத்திய பின்பு சோப்பால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருக வேண்டும் என்றார் ஆட்சியர்.