Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனி மாவட்டத்தில் காலரா பரவுவதை தடுக்க நடவடிக்கை தீவிரம்

Print PDF

தினகரன்        18.05.2010

தேனி மாவட்டத்தில் காலரா பரவுவதை தடுக்க நடவடிக்கை தீவிரம்

உத்தமபாளையம், மே 19: தேனி மாவட்டத்தில் காலரா நோய் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம், கோம்பை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலருக்கு வயிற்றுப்போக்கு நோய் பரவியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 538 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் பலருக்கு காலரா அறிகுறி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் பாதிப்பால் இறந்த பவித்ரா, காலரா கிருமிகள் தாக்கியதால்தான் இறந்ததாக மருத்துவ அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதனால், காலரா அறிகுறி உள்ளவர்களின் மலம் மாதிரிகள் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியுட், டெல்லியில் உள்ள தேசிய இடர்பாடுகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

காலரா பாதித்த பகுதிகளை தேனி கலெக்டர் முத்துவீரன் பார்வையிட்டு, உறைகிணறுகள், மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இப்பகுதியில் 25 டாக்டர்கள் குழுவினர் முகாமிட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

மருத்துவ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டெல்லியில் உள்ள தேசிய இடர்பாடுகள் ஆய்வு மையத்தில் நடத்தப்படும் சோதனையில், காலரா நோய் கிருமி தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், அங்கிருந்து அதிகாரிகள் வந்து இப்பகுதியில் நோய் பரவுவதற்கான காரணங்களை ஆய்வு செய்வார்கள். தற்போது இப்பகுதியில் தீவிர நடவடிக்கைகள் மூலம் நோய் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுஎன்றார்.