Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாடு; சுகாதாரப் பணிகளுக்கு ஆட்கள் போதாது!

Print PDF

தினமலர்      20.05.2010

செம்மொழி மாநாடு; சுகாதாரப் பணிகளுக்கு ஆட்கள் போதாது!

கோவை :செம்மொழி மாநாட்டுக்கு, சுகாதாரப் பணிகளை தாமதமின்றி செய்யும் வகையில் கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, பல லட்சம் மக்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 315 பேரை நியமிக்க முடிவு செய்து, பணி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொடிசியா தொழிற்காட்சி வளாகம், செம்மொழி மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம் மற்றும் உணவுக் கூடப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், அலங்கார வாகன ஊர்வலம் நடக்கவுள்ள அவினாசி சாலை, ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்டுகள் மற்றும் இதர முக்கிய சாலைகளில் மக்கள் குவியும் இடங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்ள சிறப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

பொதுக் கழிவறை அபிவிருத்திப் பணிகளுக்காக 87 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26 பொதுக்கழிப்பிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை, தீயணைப்புத் துறையினர் தங்க வைக்கப்படவுள்ள 19 பள்ளிகளின் கழிப்பறைகளும் 50 லட்ச ரூபாயில் சீர் செய்யப்பட்டுள் ளன.இவற்றைத் தவிர்த்து, கொடிசியா சாலை மற்றும் ஊர்வலப் பாதைகளில் 60 நடமாடும் கழிப்பறைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மட்டுமே, 3 கோடியே 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.இத்தனை ஏற்பாடு செய்தாலும், துப்புரவு பணியாளர்களை இன்னும் அதிகமாக நியமித்து, கூடுதல் வாகனங்களை வைத்து அவ்வப்போது குப்பைகளை அப்புறப்படுத்தி, கழிப்பிடங்களை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம். தினமும் காலையில் மட்டுமே சுத்தம் செய்தால், மாலைக்குள் நகரமே நாறிவிடும்.பல ஆயிரம் மக்கள் பயன்படுத்தும் உணவுக் கூடப் பகுதியில், தண்ணீர் வெளியேறவும் அங்குள்ள இலைகள், அட்டைகள் போன்ற குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.'உணவு தயாரிக்கும் இடங்கள், உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாக இருக்கிறதா' என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், சுகாதாரத்துறையினருக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட, கழிப்பிடங்களை சுத்தமாக, எல்லோரும் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.அவசர பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, பல்வேறு தனியார் மருத்துவமனைகள் பங்களிப்புடன் சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்யலாம். ஆனால், அதற்கும் முன்பாக, நோய் வருமுன் காக்கின்ற நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். சுகாதாரத்துறையும், மாநகராட்சி நகர் நலப்பிரிவும் இணைந்து செயலாற்றவேண்டும்.பல நூறு கோடி ரூபாய் செலவழித்து, நகரை அழகுபடுத்துகிறது அரசு. மாநாட்டு நாட்களில் குவியும் மக்கள் கூட்டத்துக்கு முன்பாக, இந்த அழகு எல் லாம் அவலமாகி விடும் வாய்ப்புண்டு. அதற்கு வாய்ப்பளிக்காமல் கூடுதல் பணியாளர்களை நியமித்து, தூய்மைப்பணியை துல்லியமாயச் செய்தால் எல்லோருக்கும் நலம்.தமிழர் மரபு காப்பாற்றப்படுமா?

காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்வதில் அக்கறை காட்டிய அரசு, ஓட்டல்களில் பாலீதீன் கவர்களில் சுடச்சுட சோறு, குழம்புகளைக் கட்டித் தந்து, நோயைப் பரப்பும் கலாச்சாரத்துக்கும் முடிவு கட்ட வேண்டும். வாழை இலைகள், பாத்திரங்களில் மட்டுமே 'பார்சல்' கட்ட வேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டும்.கோவையில் உள்ள ஓட்டல்களில் 50 ரூபாய்க்கு சாப்பாடு 'பார்சல்' வாங்கினாலும் வாழை இலை வாசத்தைப் பார்க்க முடியாது. பளிச்சிடும் பாலீதீன் தாள்களில் உணவுப் பொருட்கள் வழங்குவதே இங்கு வாடிக்கையாகவுள்ளது. வாழை இலையில் விருந்து படைப்பதே தமிழர் மரபு; தமிழ் மாநாட்டிலாவது இந்த மரபைக் காக்க, அரசு இப்போதே தெளிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.