Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீராதாரங்களில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்

Print PDF

தினமணி         24.05.2010

நீராதாரங்களில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்

தேனி, மே 23: தேனி மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் நீராதாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதால், குடிநீர்த் திட்டங்கள் பாழாவதோடு, பொதுமக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கால்நடைகள், விவசாயம் பாதிக்கப்படும் எனவும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, மூல வைகை, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி ஆகிய பகுதிகளில் குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் தனித்திட்டங்களின் கீழ் 60-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில், லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் பழனிசெட்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் மூலம், ஆற்றில் இருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மற்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், நீருந்து நிலையங்களிலும், நீர்தேக்கத் தொட்டிகளிலும் தண்ணீர் குளோரினேசன் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள குடிநீர்த் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டு வந்தாலும், வறட்சிக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து இல்லாமலும், பெரியாறு அணையில் நீர்மட்டம் சரிவினாலும் உறைகிணறுகள் வற்றிப் போய் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

இக்காலங்களில் ஆற்றில் கலக்கும் கழிவுநீர், குடிநீர்த் திட்ட உறைகிணறுகளைச் சூழ்ந்து நின்று, பம்பிங் செய்யப்படும் தண்ணீரில் கலந்து பொதுமக்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள், தொழிற்சாலைகள், பட்டறைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஓடைகள் மூலமும், பல இடங்களில் நேரடியாகவும் ஆற்றில் கலக்கிறது. இதுதவிர, பல்வேறு இடங்களில் கண்மாய்களிலும் கழிவுநீர் கலக்கிறது. மழைக் காலங்களில் ஆற்றில் நீர்வரத்து உள்ளதால், கழிவுநீர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது.

நீர்வரத்து இல்லாதபோது, கழிவுநீர் ஆற்றுப் படுகையில் தேங்கி, குடிநீரில் கலந்து பொதுமக்களுக்கும், கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதவிர, சில இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கழிப்பறை செப்டிக் டேங்குகளிலிருந்து உறிஞ்சப்படும் கழிவுகள் ஆற்றிலும், நீர்நிலைப் பகுதிகளிலும் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளை ஒட்டியுள்ள பகுதி வரை, மணல் அதிக அளவில் அள்ளப்படுவதால், உறைகிணறுகளைச் சூழ்ந்து நிற்கும் கழிவுநீர், தண்ணீர் பம்பிங் செய்யும் போது அதில் எளிதில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த தண்ணீரை முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்யாவிட்டால், இதனைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது.

இதனால் சுகாதார நலன் கருதியும், எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையிலும் ஆறு மற்றும் நீராதாரப் பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடைசெய்யவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகள், தொழிற்சாலைகள், பட்டறைகள் ஆகியவற்றில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றவும், நீராதாரப் பகுதிகளை கண்காணித்து பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:17