Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புறக்கணிக்கப்பட்ட இடைப்பாடி 13வது வார்டு மலை போல் தேங்கியுள்ள குப்பைகள்

Print PDF

தினமலர்    25.05.2010

புறக்கணிக்கப்பட்ட இடைப்பாடி 13வது வார்டு மலை போல் தேங்கியுள்ள குப்பைகள்

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி 13வது வார்டு பகுதியில் குப்பைகள் மலைபோல தேங்கியுள்ளன. ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ள வார்டாக இந்த பகுதி உள்ளதால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். இடைப்பாடி நகராட்சி 13வது வார்டு பகுதியில் பவானி ரோடு, மேட்டுத்தெரு, தாவாந்தெரு காட்டுவளவின் ஒரு பகுதி போன்ற பகுதிகள் உள்ளன. 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கவுன்சிலராக இருப்பவர் அ.தி.மு..,வை சேர்ந்த நெடுஞ்சேரலாதன். தாவாந்தெரு காட்டுவளவு பகுதியில் எந்த இடத்திலும் ரோடு வசதி இல்லை. மண் ரோடு சேறும், சகதியுமாக பொதுமக்களை பதம் பார்த்து வருகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகளும், வார்டு கவுன்சிலரும், சேர்மனும் கண்டு கொள்ளவில்லை. வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் காணப்படுகிறது. சாக்கடை அடைத்துக் கொண்டு கழிவுநீர் மண் ரோட்டிலேயே செல்கிறது. இப்பகுதி மின்கம்பங்களில் ஒன்றில் கூட பல்பு இல்லை. இரவு நேரங்களில் மக்கள் நடமாடவே முடியாத நிலை உள்ளது. பவானி ரோடு சந்தில் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கான்கிரிட் காரை சந்து உள்ளது. காரை தற்போது உடைந்து சின்னபின்னமாகி உள்ளது. கண்ணாரத்தெரு மாரியம்மன் கோவில் எதிரில் நாள்தோறும் குப்பைகள் கொட்டப்படுகிறது. பவானிரோடு சந்திப்பில் உள்ள சாக்கடை கற்கள் உடைந்ததால் அந்த வழியே வாகனத்தில் செல்வோர் அடிக்கடி சாக்கடைக்குள் விழ நேரிடுகிறது.

தாவாந்தெரு காட்டுவளவு பகுதி முத்துமாணிக்கம் கூறுகையில், ""கவுன்சிலர் ஓட்டுக் கேட்கும்போது இங்கு வந்தார். இந்த பகுதியில் ரோடும் இல்லை. சாக்கடையும் இல்லை. யாரிடம் சொல்வதோ தெரியவில்லை,'' என்றார். கலையரங்கம் தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த மாரிமுத்து கூறுகையில், ""முன்பெல்லாம் மினி ஆட்டோ எங்கள் பகுதிக்கு வரும். ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அதுவும் வருவதில்லை. சரிசெய்யத்தான் ஆட்கள் இல்லை,'' என்றார். காட்டுவளவு பகுதியை சேர்ந்த சாந்தி கூறுகையில், "" மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் தெருவில் நடமாடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருவுக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ தெரியவில்லை,'' என்றார்.

அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா கூறுகையில், ""எங்கள் பகுதியில் சாக்கடை தூர் எடுக்கவே ஆட்கள் வருவதில்லை. 10 வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலைக்கு லீவ் போட்டு சாக்கடையை அள்ளுகிறோம்,'' என்றார். பழனிசாமி கூறுகையில், ""எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால் நகராட்சியினர் வீட்டுவரி வசூல் செய்யவே வருவதில்லை. அப்படி யாராவது வந்தால் கூட நாங்கள் ரோடு, லைட், சாக்கடை வசதி கேட்போம். கவுன்சிலர், நகராட்சி அதிகாரிகள் என யாரும் இங்கே வருவதே இல்லை'' என்றார.