Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூரில் காலாவதி பொருள்கள்: தீவிர ஆய்வு நடத்த வேண்டுகோள்

Print PDF

தினமணி             25.05.2010

கரூரில் காலாவதி பொருள்கள்: தீவிர ஆய்வு நடத்த வேண்டுகோள்

கரூர், மே 24: கரூர் மளிகைக் கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

காலாவதியான, போலி மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களையடுத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை மருந்துப் பொருள்கள் மீது தீவிர சோதனைகள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதேபோல, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கடைகளில் மட்டுமே நகராட்சி சுகாதாரத் துறையினர் உணவுப் பொருள்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். மற்ற பகுதி கடைகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால், கரூரிலுள்ள மளிகைக் கடைகளில் உற்பத்தித் தேதி, காலாவதி தேதி, விலை, உற்பத்தியான இடம் போன்ற விவரங்கள் இல்லாத எண்ணெய்ப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது.

இதேபோல, கடுகு, பருப்பு வகைகள், மஞ்சள், வெந்தயம் பாக்கெட்டுகளிலும் எந்தவித விவரமும் இல்லை. தரமான பொருள்களைவிட குறைந்த விலையில் கிடைக்கும் இதுபோன்ற பொருள்களைத்தான் பெரும்பாலான சிறிய கடை வியாபாரிகள், சிற்றுண்டிகள், உணவுப் பொருள்கள் தயாரிக்கும் சிறிய கடைகள் வாங்கி உபயோகித்து வருகின்றன.

எனவே, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் உணவுப் பொருள்கள் விற்பனை மீது நகராட்சி சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.