Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூங்கா மதுரையைத் தூய்மையாக்கும் திட்டம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமணி   26.05.2010

தூங்கா மதுரையைத் தூய்மையாக்கும் திட்டம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்

மதுரை, மே 25: தூங்கா மதுரையை தூய்மையாக்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் சிறப்பு முகாமை மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் செவ்வாய்க்கிழமை பீ.பி.குளத்திலும், திருமங்கலத்திலும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜி.தேன்மொழி, ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து ஆட்சியர் சி.காமராஜ் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை வடக்கு மண்டலத்தில் குப்பை அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கிழக்கு மண்டலத்திலும், வியாழக்கிழமை மேற்கு மண்டலத்திலும், வெள்ளிக்கிழமை தெற்கு மண்டலத்திலும் இப்பணி நடைபெறும்.

மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் இச்சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முகாமில் சுகாதார ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

பீ.பி.குளம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குப்பை அகற்றும் பணியில், 2000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட டம்பர் பிளேஸர் லாரிகள், புல்டோசர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மதுரையில் உள்ள பூங்கா, மருத்துவமனைகள், அரசு கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. மாநகரை சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து, துணை ஆணையர் க.தர்ப்பராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் எஸ்பி.ராஜகாந்தி, .தேவதாஸ், அங்கையற்கண்ணி, ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்திலும் குப்பைகளை அகற்றும் சிறப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பணியை ஆட்சியர் தொடங்கி வைத்துப் பேசுகையில், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 10 வார்டுகள் வீதம் மூன்று நாள்களில் அனைத்து வார்டுகளிலும் இப்பணி நடைபெறும்.

திருமங்கலம் நகரில் 4 குழுக்களாகப் பிரித்து ராஜாஜி சிலையில் இருந்து உசிலம்பட்டி பிரிவு வரை ஒரு குழுவும், உசிலம்பட்டி சாலையில் இருந்து விருதுநகர் சாலை வரை ஒரு குழுவும், அரசு பொதுமருத்துவமனை உள்ளே ஒரு குழுவும், மாநில நெடுஞ்சாலையில் உள்ள முக்கியச் சாலைகளில் ஒரு குழுவுமாக நான்கு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

மேலும் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நடைபெற்ற குப்பை அகற்றும் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் அக்ஷயா, லதா அதியமான் எம்எல்ஏ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணாராம். மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.