Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற மாடறுப்பு மனைகளால் சுகாதாரக்கேடு:அகற்ற மேலப்பாளையம் மக்கள் மாநகராட்சிக்கு மனு

Print PDF

தினகரன்   31.05.2010

அனுமதியற்ற மாடறுப்பு மனைகளால் சுகாதாரக்கேடு:அகற்ற மேலப்பாளையம் மக்கள் மாநகராட்சிக்கு மனு

திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் அனுமதியற்ற மாடறுப்பு மனைகளை அகற்றி சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என நேருஜி ரோடு பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சிக்கு மேலப்பாளையம் நேருஜி ரோடு மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் வார்டு நேருஜி ரோட்டில் அனுமதி பெறாத மாடறுப்பு மனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நூற்றுக் கணக்கான மாடுகளை தினந்தோறும் லாரிகளில் மூலம் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து நள்ளிரவில் இறக்குகின்றனர். மாடுகளில் அலறல் சத்தத்தினால் வீடுகளில் குடியிருப்போர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தினந்தோறும் ஏராளமான மாடுகளை அறுப்பதன் மூலம் வெளியாகும் ரத்தம், குடல் கழிவு, சாணம் ஆகியவை திறந்தவெளி சாக்கடையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும், கொடிய நோய் கிருமிகளை பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.நூற்றுக் கணக்கான மாடுகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருப்பதால் ஒருவிதமான பூச்சி போன்ற வண்டுகளின் தொந்தரவுகள் அதிகமாக உள்ளன. மாட்டு சாணத்தை குவியலாக சேர்த்து வைப்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்த போது குடியிருப்பு பகுதியில் மாடுகள் அறுப்பதற்கு அனுமதியில்லை என எழுத்து பூர்வமாக பதில் தந்துள்ளனர். ஆனால் அதை காலி செய்வதற்கு ஆக்கப் பூர்வமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாடறுப்பு மனைகளை நடத்துவோர் பண பலமும், ஆள் பலமும் மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை எதிர்த்து போராடும் சக்தி மக்களிடம் இல்லை. மாநகராட்சியில் புகார் செய்தால் மிரட்டுகின்றனர். மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவும், மாடறுப்பு மனைகளை நடத்துவோரின் மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.