Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில்லா நகரமாக்க விழிப்புணர்வு தேவை

Print PDF

தினமணி     31.05.2010

குப்பையில்லா நகரமாக்க விழிப்புணர்வு தேவை

திருச்சி, மே 30: திருச்சி மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற பெண்கள் நல அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார் மேயர் எஸ். சுஜாதா.

திருச்சியில் அனைத்து பெண்கள் சங்கங்கள், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஐ..எஸ். தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த ஆர். லலிதாவுக்கான பாராட்டு விழாவில் அவர் பேசியது:

"திருச்சியைச் சேர்ந்தவர்கள் சாதனை படைப்பது பெருமைக்குரியது. முன்பு கேரளம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருச்சிக்கு வந்து படித்தனர். தற்போது, திருச்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற பகுதிக்குச் சென்று படிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், லலிதா சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

திருச்சியை மேம்படுத்த பெண்கள் நல அமைப்புகள் முன்வர வேண்டும். இந்த மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற பெண்கள் நல அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார் சுஜாதா.

பின்னர், ஆர். லலிதா ஏற்புரையில் பேசியது:

"இந்த வெற்றிக்குப் பெற்றோரே காரணம். அவர்கள் அளித்த ஊக்கத்தால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. நம்முடைய கனவுகள் நிறைவேறாமல் போவதற்கு மற்றவர்கள் நம்மை அலட்சியமாகப் பேசுவதே காரணம். நம்மைப் புறக்கணிக்கும் வகையில் பேசுவோர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.

இந்தத் தடைகளைத் தாண்டி வர வேண்டுமானால், பெற்றோரின் ஆதரவு நிச்சயம் தேவை. தாய், தந்தையால் முடியாதது எதுவும் இல்லை. அவர்கள் நினைத்தால் நாம் முன்னேற்றமடைய முடியும்' என்றார் லலிதா. இதில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி முதல்வர் கே. மீனா, ஜம்பகா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.