Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வயிற்றுப்போக்கு பாதிப்பு எதிரொலி சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

Print PDF

தினகரன் 01.06.2010

வயிற்றுப்போக்கு பாதிப்பு எதிரொலி சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

தேவாரம், ஜூன் 1: வயிற்றுப்போக்கு பாதிப்பை அடுத்து தேவாரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 13 கிமீ தொலைவிற்கு பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் தண்ணீர் மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, பகுதி வாரியாக விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது. சிறுமி உட்பட 4 பேர் பலியாகினர். தேவாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலப்ப தால் நோய் ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவாரம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். குடிநீரில் முறையாக குளோரினேஷன் செய்யப்படுகிறதா, விநியோகம் முறையாக நடக்கிறதா என ஆய்வு செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவாரத்தை சேர்ந்த ரகுபதி கூறுகையில், ``வயிற்றுப்போக்கு பாதிப்பை அடுத்து இப்பகுதியில் சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் குழாய்களில் உடைப்புகள் சரிசெய்யப்படுகின்றன. தண்ணீர் விநியோகம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வரவேற்க தக்கதே என்றாலும், முன்கூட்டியே இப்பணியை செய்திருந்தால் நோய் பரவாமல் தடுத்திருக்கலாம்’’ என்றார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``குடிநீரில் கழிவுநீர் கலந்ததும், குளோரினேசன் சரியாக இல்லாததும் வயிற்றுப்போக்கு பரவ காரணமாகிவிட்டது. உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் இருந்து பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின்றன. இதில் கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உடைப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அதனை சீரமைக்கும் பணி நடக்கிறது.’’ என்றார். '