Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரத்தில் இந்திய அளவில் 6வது இடம்: மாநகராட்சி கோட்டத்தலைவருக்கு சந்தேகம்

Print PDF
தினமலர் 02.06.2010

சுகாதாரத்தில் இந்திய அளவில் 6வது இடம்: மாநகராட்சி கோட்டத்தலைவருக்கு சந்தேகம்

திருச்சி: ""திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப்பணியாளர் பற்றாக்குறை உள்ள நிலையில் சுகாதாரத்தில் அகில இந்திய அளவில் ஆறாவது இடம் கிடைத்தது எப்படி?'' என்று கோட்டத்தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் எழுப்பிய சந்தேகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி மற்றும் கவுன்சிலர்களும், மாநகராட்சி அலுவலர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் வனிதா, சத்தியமூர்த்தி, அப்துல் நிசார், அறிவுடை நம்பி உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் பேசும்போது, "மாநகராட்சி சுகாதார அலுவலர் வார்டுகளில் "மாஸ்' கேம்ப் நடத்துவதாக கூறினார். ஆனால், நடக்கவில்லை. ஒவ்வொரு வார்டுகளிலிருந்தும் சிறப்பு பணி என்ற பெயரில் துப்புரவுப் பணியாளர்களை வேறு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து கோட்டத்தலைவர்களிடமோ, கவுன்சிலர்களிடமோ கலந்து ஆலோசிக்கவில்லை' என்று ஒருசேர குற்றச்சாட்டி பேசினர். மேலும் சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் பேசினர்.

அப்போது பேசிய அரியமங்கலம் கோட்டத்தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெரோம் ஆரோக்கியராஜ், "கவுன்சிலர்கள் பேசுவதைப் பார்க்கும் போது துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை மாநகராட்சியில் அதிகம் உள்ளது. இந்நிலையில், இந்திய அளவில் சுகாதாரமான மாநகராட்சிக்கான பட்டியலில் திருச்சி மாநகராட்சி ஆறாவது இடம் பிடித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை மத்திய அரசின் அதிகாரிகள் எதைவைத்து தேர்வு செய்தனர் என்றும் தெரியவில்லை. ஏ.சி., ரூமில் உட்கார்ந்து கொண்டு அறிவித்து விட்டார்களா? என்று தெரியவில்லை' என்றார்.

அகில இந்திய அளவில் திருச்சி மாநகராட்சி பெருமை சேர்க்கும் விஷயமாக சுகாதாரத்தில் ஆறாவது இடம் கிடைத்ததை அனைவரும் கொண்டாடும் வேளையில், காங்கிரஸ் கோட்டத்தலைவர் இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பியது கவுன்சிலர்களையும், மேயர், துணைமேயர், கமிஷனரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பதில் அளித்து மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் பேசும்போது, "இந்த தேர்வுக்கு 22 அளவீடுகள் உள்ளது. அவைகளில் நம் மாநகராட்சி நல்ல மதிப்பெண்களை பெற்றதால் ஆறாவது இடம் கிடைத்துள்ளது. நம்மை விட மற்ற அனைத்து மாநகராட்சிகளும் மோசமாகத்தான் உள்ளது' என்று விளக்கமளித்தார். இந்த பதிலில் ஜெரோம் ஆரோக்கியராஜ் சமாதானம் அடைந்தாலும், அரைகுறை மனதுடன் அதிகாரியின் பதிலை ஒத்துக் கொண்டார்.