Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மருத்துவப் பரிசோதனையின்றி அறுக்கப்படும் ஆடுகள்?

Print PDF

தினமணி 02.06.2010

மருத்துவப் பரிசோதனையின்றி அறுக்கப்படும் ஆடுகள்?

காரைக்கால், ஜூன் 1: காரைக்கால் நகரில் பல்வேறு இடங்களில் உரிய மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமலேயே ஆடுகள் அறுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

÷காரைக்காலில் வார நாள்களில் சுமார் 100 ஆடுகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 600 ஆடுகளும் அறுக்கப்படுகின்றனவாம். இவை நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இறைச்சி விற்பனை மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

÷விற்பனைக்கு முன்னதாக, காரைக்காலில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இயங்கும் அவாதுறை என அழைக்கப்படும் ஆடு அறுக்கும் கூடத்துக்கு ஆடுகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுகாதார ஆய்வாளரால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும்.

÷சோதனையில், நோய்வாய்ப்பட்ட, மிகவும் இளம் ஆடுகளாக இருந்தால் நிராகரிப்பு செய்யப்படுவது வழக்கமாம்.

÷இந்நிலையில், குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் ஆட்டிறைச்சி விற்பனை மையங்களை வைத்திருக்கும் சிலர் மட்டுமே காரைக்காலில் உள்ள பழைய ஆடு அறுக்கும் கூடத்துக்கு ஆடுகளைக் கொண்டு சென்று, பரிசோதனை செய்து, ஆடுகளை அறுக்கின்றனராம்.

÷ஆனால், பெரும்பாலானோர் தங்களுக்கு வசதியுள்ள இடங்களில் ஆடுகளை அறுத்து, நேரடியாகவே விற்பனைக்கு கொண்டு செல்கின்றனராம். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாள்களில் வியாபாரிகள் இவ்வாறு செய்வதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

÷மருத்துவப் பரிசோதனை செய்யாத ஆடுகள் ஏதேனும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தால், அந்த இறைச்சியை சாப்பிடும் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற வியாபாரிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்: ஆடுகள் உரிய மருத்துவப் சோதனைக்கு பின்னர் அறுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் நகராட்சி நிர்வாகத்தின் சுகாதார ஆய்வாளருக்கு முக்கியப் பொறுப்புண்டு. இவரே ஆடுகளைப் பரிசோதனை செய்து முத்திரையைக் குத்துவாராம்.

÷ஆனால், காரைக்கால் நகராட்சியில் இந்தப் பதவிக்குரிய பணியிடம் காலியாக உள்ளது. இது அதிகாரிகள் சிலருக்கும், இறைச்சி வியாபாரிகளுக்கும் மேலும் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய ஆடு அறுக்கும் கூடம் திறக்கப்படுமா: காரைக்காலில் பழைய ஆடு அறுக்கும் கூடமே செயல்பாட்டில் உள்ளது. தற்போது, ரூ.75 லட்சத்தில் புதிய ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டு, பணிகள் முடிந்துள்ளன. அங்கு மின் இணைப்புகள் தர வேண்டியது மட்டுமே மீதமுள்ள பணியாகும். என்ன பிரச்னையால் இந்தப் பணி தொடர்ந்து தாமதப்படுத்தப்படுகிறது எனத் தெரியவில்லை என்கின்றனர் நகர்மன்ற உறுப்பினர்கள்.

÷மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைச் செய்து தர வேண்டிய நகராட்சி நிர்வாகமே, ஆடுகளை அறுப்பதில் கவனக்குறைவாக இருப்பது பெரும் ஆபத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்கின்றனர் பொதுமக்கள்.

÷புதிய ஆடு அறுக்கும் கூடம் திறக்கப்பட்ட பின்னர், அறுக்கப்படும் ஆடுகள் அனைத்தையும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல், ஆடுகளைப் பரிசோதனைக்கு பின்னரே அறுக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.