Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவாரூரில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 04.06.2010

திருவாரூரில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருவாரூர், ஜூன் 3: திருவாரூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் நகரில் பள்ளிகள் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழ்நாடு புகைபிடித்தல் சட்டத்தின்படி, பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் வரை புகையிலை தயாரிப்புப் பொருள்களான சிகரெட், பீடி, சுருட்டு, பான்பராக் மற்றும் வாசனை புகையிலை போன்ற பொருள்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதில்லை என்ற வாசகம் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அலுவலகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நகராட்சி ஆணையர் க. சரவணன் தலைமையில் சுகாதார அலுவலர் ராஜா, ஆய்வாளர்கள் க. மணாழகன், என். வெங்கடாசலம், வி. பழனிசாமி, ஆர். பாலமுருகன், வி. அருள்தாஸ் மற்றும் அலுவலர்கள் திருவாரூர் நகரில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே 100 மீட்டருக்குள் உள்ள கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் குழிதோண்டி புதைக்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் புகைபிடித்த 20 பேரிடம் தலா ரூ.100 வீதம் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் இறக்கின்றனர். இது அடுத்த 20 ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரிக்கக் கூடும். புகைப்பிடிப்பவர்களைக் காட்டிலும் அருகில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஆணையர் க. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.