Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுக்களை ஒழிக்க அதிரடி திட்டம் சுகாதார துறை நடவடிக்கை

Print PDF

தினகரன் 07.06.2010

கொசுக்களை ஒழிக்க அதிரடி திட்டம் சுகாதார துறை நடவடிக்கை

கோவை, ஜூன் 7: கோவையில் ஈடீஸ்வகை கொசுக்கள் வேகமாக பெருகி வருகிறது. கொசுக்களை ஒழிக்க சுகாதார துறை அதிரடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் கூறியதாவது:

செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படுத்தும் ஈடீஸ்எகிப்தி வகையை சேர்ந்த கொசுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருக்கிறது. இந்த கொசுக்கள் மழை காலத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணிகளை கடந்த 17ம் தேதி துவங்கியுள்ளோம். 45 நாளுக்குள், 10 அரசு சுகாதார நிலைய எல்லைக்குள் உள்ள பகுதிகள் கொசுக்களை கட்டுபடுத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். மழை நீர் டயர், டியூப், பூந்தொட்டி, தேங்காய் தொட்டி உள்ளிட்ட பகுதியில் தேங்கினால் அங்கே ஈடீஸ் வகை பெருகி வளரும். எனவே இந்த பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம். மேலும் குடிநீர் தொட்டிகளில் கொசுக்களின் முட்டை, லார்வாக்களை அழிக்கும் கம்பூசியாமீன்களை விடுகிறோம். சுகாதார துறையில் இதுவரை 50 ஆயிரம் கம்பூசியா மீன்கள் வந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து இந்த மீன்களை பெற்றிருக்கிறோம். பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கப்படுகிறது. குடிநீர் தொட்டியில் மீன்களை விட்டால் போதும், அந்த மீன்கள் கொசுக்களை கட்டுப்படுத்தி விடும்.இவ்வாறு அவர் கூறினார். கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) அருணா கூறியதாவது:

கோவை நகரில் ஈடீஸ், கியூலஸ் வகை கொசுக்கள் அதிகமாக இருக்கிறது. நல்ல நீர் நிலையில் ஈடீஸ் கொசும், அசுத்த நீர் நிலையில் கியூலஸ் வகை கொசுக்களும் காணப்படுகிறது. கியூலஸ் கொசுக்கள் கடித்தால் பெரிய அளவு பாதிப்பு இருக்காது. ஆனால் அதிகமாக கடித்தால் யானைக்கால் நோய் பரவ வாய்ப்புள்ளது. நகர் பகுதியில் உள்ள வீட்டு குடிநீர் தொட்டிகளில் கொசுக்கள் அதிகமாக வசிப்பதாக தெரிகிறது. எனவே வலைகளை குடிநீர் தொட்டியில் கட்டுமாறு கூறியிருக்கிறோம். வீட்டு பகுதியில் நல்ல நீர், மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவேண்டும் என தெரிவித்திருக்கிறோம். மாநாட்டிற்காக வரும் 315 தொழிலாளர்கள், வரும் 10ம் தேதி முதல் பணியாற்றவுள்ளனர். கோவை நகர் முழுவதும் மாஸ் கிளீனிங்என்ற ஒட்டு மொத்த தூய்மை பணி நடத்தப்படும். தற்போது வீடு வீடாக மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றி வருகிறோம். 6 நாள், முறை வைத்து கொசு மருந்து தெளிப்பு பணி நடத்தப்படுகிறது. குடிநீர் தொட்டிகளில் அபேட் என்ற மருந்து தெளிக்கப்படுகிறது. மழை பெய்தால் கொசு பெருக்கம் அதிகமாகி விடும். இதற்கேற்ப திட்டம் தயாரித்து செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.