Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜூலை மாத இறுதியில் சாரல் திருவிழாகுற்றாலத்தில் அடிப்படை வசதிகளுக்கு உத்தரவு:பிளாஸ்டிக் பொருட்களுக்கு

Print PDF

தினமலர் 09.06.2010

ஜூலை மாத இறுதியில் சாரல் திருவிழாகுற்றாலத்தில் அடிப்படை வசதிகளுக்கு உத்தரவு:பிளாஸ்டிக் பொருட்களுக்கு

திருநெல்வேலி:குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சாரல் திருவிழா நடக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.குற்றாலத்தில் வரும் ஜூலை மாதம் இறுதியில் சாரல் திருவிழா அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறப்பாக சாரல் விழா நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றாலம் பகுதியில் சுகாதார ஏற்பாடுகளை விரிவாக செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பஸ் ஸ்டான்ட் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ் வசதி, மின் வசதி ஏற்படுத்தவும், மக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் முதல் உதவி உட்பட முக்கிய டெலிபோன் எண்களை விளம்பரப்படுத்த வேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்புகளை போலீஸ் துறையினர் உதவியுடன் உடனடியாக அப்புறப்படுத்தவும், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, குற்றாலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாரல் திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி சப்-கலெக்டர் வீரராகவராவ், தென்காசி டி.எஸ்.பி ஸ்டாலின், திட்ட அலுவலர் சங்கர், சுற்றுலா அலுவலர் விஜயகுமார், ஆர்.டி.ஓக்கள் மூர்த்தி, தமிழ்செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா மைதீன், டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் சீனிவாசன், பி.ஆர்.ஓ ரவீந்திரன், குற்றாலம் டவுன் பஞ்.,துணைத் தலைவர் ராமையா, செயல் அலுவலர் ராசையா, தாசில்தார்கள், அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென் மேற்கு பருவ மழை இயற்கை இடர்பாடு பிரச்னைகள்:தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு:*கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை வசதிதிருநெல்வேலி:தென் மேற்கு பருவ மழை இயற்கை இடர்பாடுகளை தடுக்க தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், குளங்களை பொதுப்பணித் துறையினர் பார்வையிட்டு தண்ணீர் செல்வதற்கு இடையூறு இல்லாமல் ஆக்ரமிப்புகளை அகற்றி சரி செய்ய வேண்டும். உடைப்புகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக் கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களை நேரில் பார்வையிட்டு போதுமான வசதிகள் உள்ளதா என அறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் உயிர்களை காப்பாற்ற தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் உள்ள பாலங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அடைப்பு இல்லாமல் பாதுகாக்கவும், உடைப்பு ஏற்படும் கால்வாய்களில் உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைத்து நீரேற்று நிலையங்களில் குடிநீரை குளோரின் மூலம் சுத்தம் செய்து முறையான குடிநீர் வினியோகம் தடைபடாமல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலங்களில் சுத்தம் செய்து கழிவு நீர் வாய்க்கால்களை தூர் வார வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தண்டோரா மூலம் தெரிவிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே வெளியேற செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.சத்துணவு மையங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தேவையான பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். மருத்துவ நடவடிக்களை மேற்கொண்டு மருத்துவ, சுகாதார துறையினர் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும், மருத்துவ குழு மற்றும் அவசர கால ஊர்தி தயார் நிலையில் வைக்க வேண்டும். உணவு பொருள் வழங்கல் பிரிவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் தேவையான உணவு பொருட்கள், மண்ணெண்ணெயை இருப்பு வைக்க வேண்டும். அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறையினர் கால்நடைகளுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கவும், தேயைவான மருந்துகள், தீவனங்கள் கிடைக்கவும், இயற்கை சீற்றத்தால் மரணமடையும் கால்நடைகளுக்கு நிவாரண தொகை கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் உரங்களை தட்டுப்பாடு இன்றி இருப்பு வைக்கவும், பயிர் சேதங்களை உடனுக்குடன் அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதிக வெள்ளம் ஏற்படும் நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி மின் வினியோகத்தை சரி செய்ய வேண்டும்.ஆர்.டி.ஓக்கள், தாசில்தார்கள் ஒருங்கிணைந்து கிராமப்புறங்களில் ஏற்படும் சேதங்களை அறிந்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீடுகள் இழப்பு, உயிர் சேதம், கால்நடை சேதம் ஆகியவற்றை அறிந்து நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் நான்கு இலக்க டெலிபோன் இணைப்பு பெறப்பட்டு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, சப்-கலெக்டர் வீரராகவராவ், திட்ட அலுவலர் சங்கர், ஆர்.டி.ஓக்கள் மூர்த்தி, தமிழ்செல்வி, கூடுதல் நேர்முக உதவியாளர் (பொது) லீலா, போலீஸ் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதார துறை, வேளாண், தோட்டக்கலைத் துறை, மருத்துவ துறை அலுவலர்கள், தாசில்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர