Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் தொற்று நோய் தடுப்பு அதிகாரிகள் ஆலோசனை

Print PDF

தினகரன் 14.06.2010

மாநகராட்சியில் தொற்று நோய் தடுப்பு அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூர், ஜூன் 14:கொசு மூலம் பரவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத் தினர்.

தென்மேற்கு பருவமழை, மாறிவரும் தட்பவெப்பம் போன்றவற்றால் பெங்களூரில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகிறது. கடந்த ஜனவரி முதல் மே இறுதிவரை 60 பேர் டெங்கு மற்றும் 23 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசோக்நகர், ஜெய்பீம்நகர், ஈஜிபுரா, விவேக்நகர், நீலசந்திரா, ஹொஸ்கெரேஹள்ளி, இட்டமடு, மகாதேவபுரா, பேட்ராயனபுரா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகரித்துள்ளனர். இப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூட்டம் பெங்களூர் மாநகராட்சி ஆணையர் பரத்லால்மீனா தலைமையில் நடந்தது.

கொசுவால் பரவும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை தடுக்க தவறிய அதிகாரிகளை பரத்லால்மீனா கண்டித்தார். வெள்ளநீர் வடிகால், ஏரிகள், குளங்களை தூர்வாரி சுத்தமாக வைத்திருக்குமாறு அதிகாரிகளை ஆணையர் கேட்டுக்கொண்டார். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதிகளில் மருந்து தெளிக்குமாறும், தொற்றுநோய்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.கொசுஇனப் பெருக் கத்தை தடுக்க புகைஅடிப்பது,மருந்து தெளிப்பதை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,

கொசு ஒழிப்புப்படையில் சுமார் 100 பேர் உள்ளனர். கொசு ஒழிப்புமருந்து தெளிப்பான்களை புதிதாக வாங்க இருக்கிறோம். பொதுமக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீட்டுக்குவீடு சென்று பிரசாரம் செய்யவிருக்கிறோம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சிலரை இப்பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்.’ என்றார்.