Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியை துரிதமாக்க மாநகராட்சி புது திட்டம்

Print PDF

தினமலர் 21.06.2010

துப்புரவுப் பணியை துரிதமாக்க மாநகராட்சி புது திட்டம்

கோவை : கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தூய்மைப் பணியினால், நகரில் மேற்கொள்ளப்படும் அன்றாட துப்புரவுப்பணிகள் தொய்வடையாமல் தடுக்க, கோவை மாநகராட்சி புதிய திட்டத்தை வகுத்துள்ளது. கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல லட்சம் மக்கள் வருவதாக உளவுத்துறையினர் கணக்கீடு மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த கணக்கீட்டின்படி சுகாதாரம், குடிநீர், கழிப்பிடங்கள் அமைப்பது, துப்புரவுப்பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி புதிய திட்டம் வகுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநாடு நடைபெறும் கொடிசியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் துப்புரவு பணிமேற்கொள்வதற்கென்று கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 600 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வயதாகாத, திடகாத்திரமான நிலையில் உள்ள 600 துப்புரவு தொழிலாளர்கள் செம்மொழி மாநாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டு பந்தல், கண்காட்சி அரங்கம், ஊடக அரங்கு, மூன்று உணவுக்கூடங்கள், தமிழ் இணைய மாநாடு நடைபெறும் அரங்கு ஆகியவற்றில் 450 துப்புரவு தொழிலாளர்கள் பணிமேற்கொள்வர். மீதமுள்ள 150 பேர் மாநாடு நடைபெறும் பகுதிக்கு வெளியே, குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவர். 600 துப்புரவு தொழிலாளர்களை மேற்பார்வை செய்ய கோவை நகரில் பணிபுரியும் 31 சுகாதார ஆய்வாளர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 40 சுகாதார ஆய்வாளர்களும் பணியில் ஈடுபடுகின்றனர். இது தவிர, கோவை நகரில் பணிபுரியும் 48 துப்புரவு மேற்பார்வையாளர்களும் செம்மொழி மாநாட்டுப் பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களும் ஜூன் 20 ம் தேதி முதல் மாநாடு முடிந்த பின்பு ஜூன் 30 ம் தேதி வரை துப்புரவு பணிகளை இரண்டு ஷிப்ட் அடிப்படையில் மேற்கொள்வர்.

மாநாடு நடைபெறும் நாட்களில் துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, அங்கேயே தங்கவைக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு வளாகத்தில் குப்பை சேகரம் செய்ய 240 லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 பிளாஸ்டிக் கூடை(பின்)கள் வைக்கப்பட்டுள்ளன. 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட 150 பிளாஸ்டிக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 பிளாஸ்டிக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஒரு டன் எடை கொண்ட 50 இரும்பு கன்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகளை எடுத்து செல்ல மாநாட்டு வளாகத்தில் 12 டாட்டா ஏஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் எடுத்துச் செல்லப்படும் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கு மாநாட்டு வளாகத்திற்கு வெளியே 16 டன் கொள்ளளவு கொண்ட வேகன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை நிரம்ப நிரம்ப அப்படியே லாரிக்கு மாற்றம் செய்யப்பட்டு உடனடியாக குப்பை, பீளமேட்டிலுள்ள குப்பை மையத்திற்கு கொண்டு செல்லப்படும். இதற்காக தயார் நிலையில் 4 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. குப்பை சேகரம் செய்ய 16 டன் கொள்ளளவு கொண்ட 8 வேகன் வைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் 450 பேர் அனுபவமில்லாதவர்கள் என்பதால் அவர்களை நகரில் துப்புரவு பணி செய்ய பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்றாக அனுபவம் வாய்ந்த நிரந்தர பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் கொடிசியா வளாகத்தில் பணியமர்த்தியுள்ளது.

மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் தவிர, கோவை நகரிலுள்ள திருமண மண்டபங்கள், மாநகராட்சி பள்ளிகள் என்று மாநாட்டுக்கு வருவோர் 133 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு துப்புரவு பணி செய்ய 600 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மேற்பார்வை செய்ய 40 துப்புரவு மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இது தவிர கோவை நகரில் மக்கள் அதிகமாகக் கூடும் உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம், மேட்டுப்பாளையம் ரோடு, ஆம்னிபஸ் ஸ்டாண்ட் போன்ற பஸ் ஸ்டாண்டுகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள சிறப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் இரண்டு ஆயிரத்து 800 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர், வழக்கமாக விடுப்பில் 400 முதல் 500 பேர் வரை சென்று விடுவதால், மீதமுள்ள 2 ஆயிரத்து 400 பேரை கொண்டு நகரில் துப்புரவு மேற்கொள்ளப்படும். தற்போது செம்மொழி மாநாட்டு பணிகளுக்காக கூடுதலாக 450 ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்துப்பட்டுள்ளதால் வழக்கமாக பணிபுரியும் தொழிலாளர்கள் 150 பேர் மட்டுமே கொடிசியா கண்காட்சி வளாகத்தில் புரிகின்றனர். அதனால் நகரில் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகளில் எவ்வித தொய்வோ பாதிப்பு ஏற்படாது. மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா கூறியதாவது:

செம்மொழி மாநாட்டு பணிகளுக்காக கூடுதலாக துப்புரவு பணியாளர்களை பணியமர்த்தியுள்ளதால், நகரில் மேற்கொள்ளப்படும் பணிகளில் எவ்வித தொய்வோ பாதிப்போ ஏற்படாது. செம்மொழி மாநாட்டு பணிக்காக பொள்ளாச்சி, உடுமலை, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நம் தேவைக்கு தகுந்தாற்போல் சுழற்சி அடிப்படையில் பணி மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் கோவைக்கு வருகின்றனர்.மாநாட்டு உணவுக்கூடங்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பதானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈக்கள் மற்றும் கொசுக்கள் வராமல் தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீருக்கு குளோரினேஷன் செய்வது, குடிநீரை சரியான நிலையில் தொட்டியில் நிறைக்கும் பணிகள் மேற்கொள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தயாரிக்கப்படும் உணவு பரிசோதனை மேற்கொள்ளவும் உணவு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செம்மொழி மாநாட்டு பணிக்கு, மாநகராட்சி சார்பில் அனைத்து பணிகளும் முற்றுப்பெற்று தயார் நிலையிலுள்ளது. மருத்துவம், அவசர சிகிச்சை பணிகள் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.