Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெல்லியில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்

Print PDF

தினகரன் 06.07.2010

டெல்லியில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்

புதுடெல்லி, ஜூலை 6: பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

டெல்லியில் பல இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் இருந்தாலும் காலி இடங்களிலும், சுவர்களிலும் சிறுநீர் கழிப்பதை பல இடங்களில் காண முடிகிறது. பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது குற்றம் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கையை மாநகராட்சி கடந்த 1ம் தேதி முதல் எடுத்து வருகிறது.

இதுபற்றி மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் தீப் மாத்தூர் கூறியதாவது:

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் விவகாரத்தை 2 வழிகளில் அணுக முடிவு செய்துள்ளோம். ஒன்று, டி.வி.க்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது. 2வது வழி, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பது.

அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களைப் பிடித்து அதிகபட்சமாக ரூ.500 வரை அபராதம் விதிக்கிறோம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 15ம் தேதி வரை அபராத நடவடிக்கை தொடரும். திரும்ப, திரும்ப கழித்தால் அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டுமென்று, வரைவுத் திட்டத்தின் மூலம் மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீப் மாத்தூர் கூறினார்.

அபராதம் விதிக்கும் அதே நேரத்தில் டெல்லி மாநகராட்சியில் பொதுக் கழிப்பிடங்கள் குறைவாக உள்ளது என்பதையும் தீப் மாத்தூர் ஒப்புக் கொள்கிறார். அவர் கூறுகையில், "பொதுக் கழிப்பிடங்கள் குறைவாகத்தான் உள்ளன. 2,500 கழிப்பிடங்களை மாநகராட்சி கட்டியுள்ளது. மேலும், 1000 நீரில்லா சிறுநீர் கழிப்பறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பல்வேறு மார்க்கெட் பகுதிகளில் 216 கழிப்பிட வளாகங்களை அமைக்க அண்மையில் டெண்டர்கள் விட்டுள்ளோம். அனைத்தும் காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக முடியும். இந்த கழிப்பிட வளாகங்களில் காபி ஷாப், பூக்கடைகள், பாஸ்ட்புட் கடைகளும் இருக்கும்" என்றார்.

புதுடெல்லி நகராட்சிக் கவுன்சில் எல்லைப் பகுதிகளில் வெறும் 194 பொதுக் கழிப்பிடங்கள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பொதுக் கழிப்பிடங்களை பராமரித்து வரும் சுலாப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் கூறுகையில், "டெல்லியில் ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் பொதுக் கழிப்பிடத்தை அமைக்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், மேலும், 10,000 பொதுக் கழிப்பிடங்கள், 2 லட்சம் நீரில்லா சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்க வேண்டியது அவசியம்.

பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிங்கப்பூரில் இருக்கும் நடைமுறையைப் போல கடும் அபராதத்தை விதிக்க வேண்டும்" என்றார்.