Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி துப்புரவு பணிகளை மேற்கொள்ள 152 சுய உதவி குழு உறுப்பினர்கள் நியமனம்

Print PDF

தினமலர் 22.07.2010

மாநகராட்சி துப்புரவு பணிகளை மேற்கொள்ள 152 சுய உதவி குழு உறுப்பினர்கள் நியமனம்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள விரைவில 152 சுய உதவி குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் அனுமதிக்கப்பட்ட 885 துப்புரவு பணியாளர்களில் தற்போது 586 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 299 இடங்கள் காலியாக உள்ளது. துப்புரவு பணியாளர்களின் வயது முதிர்வு ஓய்வு, பணியின் போது காலமாதல் ஆகியவற்றினால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த மாதத்திலும் பலர் ஓய்வு பெற உள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களை கொண்டு மாநகராட்சி முழுவதும் துப்புரவு பணியை தடையின்றி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. மழைக் காலத்தில் ஏற்படும் சுகாதார கேடுகளால் பொதுமக்களுக்கு பரவும் நோய்களை தவிர்த்திட சுகாதார பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகராட்சியில் சுகாதாரத்தை பராமரிக்கும் வகையில் துப்புரவு பணியை தொய்வின்றி மேற்கொள்ள போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

துப்புரவு பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே 130 சுய உதவி குழு உறுப்பினர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 152 சுய உதவி குழு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

துப்புரவு பணியின் அவசியம் கருதி ஒவ்வொரு துப்புரவு அலகிற்கு தேவைப்படும் துப்புரவு பணியாளர்களை காலி பணியிடங்களுக்கு மிகாமல் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் அந்தந்த மண்டல பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்தி கொள்ளவும், அவ்வாறு ஈடுபடுத்தப்படும் குழுக்களுக்கு கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தினக் கூலியை அடிப்படையாக கொண்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.