Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் குப்பைகள் தேக்கம் : வாகன பற்றாக்குறையால் மாநகராட்சி நிர்வாகம் திணறல்

Print PDF

தினமலர் 22.07.2010

சேலத்தில் குப்பைகள் தேக்கம் : வாகன பற்றாக்குறையால் மாநகராட்சி நிர்வாகம் திணறல்

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் குப்பைகள் தேக்கம் அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் மூன்று ஆண்டுக்கு முன் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33 47 ஆகிய 21 வார்டு துப்புரவு பணி பெங்களூரை சேர்ந்த ஸ்வச்சதா கார்ப்ரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்வச்சதா கார்ப்ரேஷன் நிறுவனம் சார்பில் பெரிய டிப்பர் லாரி 11, டிராக்டர் ஐந்து, கூப்பர் ஆட்டோ 23 ஆகிய வாகனங்கள் மூலம் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. தனியார் வசம் இருந்த 21 வார்டிலும் மொத்தம் 650 பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த ஜூன் 29 ல் சேலம் மாநகராட்சி-ஸ்வச்சதா கார்ப்ரேஷன் நிறுவனம் ஒப்பந்த காலம் முடிந்தது. பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையே துப்புரவு பணியை மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தனியார் வசம் இருந்த 21 வார்டிலும் மாநகராட்சி சார்பில் தினக்கூலி பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் 39 வார்டில் 46 டிராக்டர், ஆறு டம்பர் பிளேசர், ஆறு மினி லாரி, ஒரு டிப்பர் லாரி மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த 21 வார்டிலும் தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு பணி வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்ற வேண்டி இருக்கிறது. சேலம் மாநகராட்சியில் தற்போது நாள் ஒன்றுக்கு 600 டன் குப்பைகள் தேக்கம் அடைந்து வருகிறது. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது தனியார் வார்டிலும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்கள் ஏற்கனே மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. வாகனங்களின் இழுவை திறன் குறைவால் அதிகளவு குப்பைகளை ஏற்ற முடியாத நிலை உள்ளது. தவிர, பெரும்பாலான வாகனங்கள் அடிக்கடி சிறிய பழுதுக்கு உட்படுகிறது. சில நாட்களாக சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் முறையாக குப்பைகளை அகற்ற முடியவில்லை. பல இடங்களில் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளது. சில வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புதிதாக வாகனங்களை வாங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை புதிததாக வாகனங்களை வாங்குகின்றனர். ஆனால், சுகாதார சீர்கேட்டை தவிர்க்க குப்பை அள்ளும் வாகனங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, சேலம் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளின் பிடியில் ஸ்தம்பித்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.