Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைக்குள் சிக்கித் தவிக்கும் கோயம்பேடு மார்க்கெட்

Print PDF

தினமலர் 23.07.2010

குப்பைக்குள் சிக்கித் தவிக்கும் கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு : குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயலற்று போனதாலும், தனியார் நிறுவன வேலையாட்களின் மெத்தன போக்காலும், கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகள் மலைபோல் குவிகின்றன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட், 295 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழம் மற்றும் பூக்கள் விற்பனையில் 3,194 கடைகள் செயல்படுகின்றன. இங்கு சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

மார்க்கெட் வளாக பராமரிப்பு, பாதுகாப்பு, வியாபாரிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பணிகளை எம்.எம்.சி., என்றழைக்கப் படும் அங்காடி நிர்வாக குழு(மார்க்கெட் மெயின்டனன்ஸ் கமிட்டி) கவனிக்கிறது.மார்க்கெட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் இருந்து, தினமும் சராசரியாக 30 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறி கழிவுகள், மார்க்கெட் வளாக பகுதியில் உள்ள சாலைகளில் கொட்டப்படுகின்றன.இதில் மக்காத குப்பைகளில் காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கும், மக்கும் குப்பைகள், கொடுங்கையூருக்கும் கொண்டு செல்லப் படுகின்றன. தற்போது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் மார்க்கெட்டில் மலைபோல் குப்பைகள் தேங்குகின்றன.

குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு, "கான்ட்ராக்ட்' விடப்பட்டுள்ளது. அவர்கள், வாரத்தின் அனைத்து நாட்களிலும் குப்பைகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்தை அழைத்து பேசிய அங்காடி நிர்வாக குழு, குப்பை முறையாக எடுக்கப்படவில்லை என்றால், "கான்ட்ராக்ட்' ரத்து செய்யப்படும் என, சமீபத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.எச்சரிக்கை விடப்பட்டு நான்கு வாரங்களாகியும் குப்பைகள் அகற்றுவதில் அவர்கள் படுமெத்தனம் காட்டுவதாகவும், அவர்களை மேற்பார்வையிடும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை எனவும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது அடிக்கடி மழை பெய்வதால், மார்க்கெட்டில் குப்பையுடன் மழைநீரும் தேங்கி அங்கு தொற்றுநோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மார்க்கெட் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இயங்குவதால், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் அங்காடி நிர்வாக குழுவினரிடம் மார்க்கெட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மாறி மாறி எச்சரிக்கை விடப்பட்டும் குப்பைகள் சேர்ந்துக் கொண்டே தான் போகிறது. இந்த விஷயத்தில் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.