Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்பேட்டையில் இருந்து அனுப்பானடிக்கு மாறுகிறது ஜப்பான் தொழில்நுட்பத்தில் நவீன ஆடு அறுக்கும் நிலையம் தயார்

Print PDF

தினகரன் 23.07.2010

நெல்பேட்டையில் இருந்து அனுப்பானடிக்கு மாறுகிறது ஜப்பான் தொழில்நுட்பத்தில் நவீன ஆடு அறுக்கும் நிலையம் தயார்

மதுரை, ஜூலை 23: மதுரை அனுப்பானடியில் ஜப்பான் தொழில்நுட்பத்துடன் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன ஆடு அறுக்கும் நிலையத்தில் நேற்று சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. விரைவில் நெல்பேட்டையிலுள்ள மாநகராட்சி ஆடு அறுக்கும் நிலையம் அனுப்பானடிக்கு மாற்றப்படுகிறது.

மதுரை நெல்பேட்டையில் மாநகராட்சி ஆடு அறுக்கும் நிலையம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இங்கு ஆடு அறுக்கப்பட்டு, மாநகராட்சி முத்திரை பெற்று தான் நகர் முழுவதுமுள்ள இறைச்சி கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். எனவே ஆடுவதை மையம் சுகாதாரமான முறையில் அனுப்பானடியில் ரூ.3.50 கோடியில் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஜப்பான் தொழில்நுட்பத்தில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் இயக்கம் குறித்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. உயிருள்ள ஒரு ஆட்டை இறைச்சியாக பிரித்தெடுக்க 3 நிமிடம் ஆகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் கூறியதாவது: நவீன அறுக்கும் நிலையம் தயார் நிலையில் உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் ஆடுகள் டாக்டர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பிறகே அறுக்க அனுமதிக்கப்படும். இதன்மூலம் நோய்வாய்பட்ட ஆடுகளை அறுப்பதை தடுக்க முடியும். சுகாதாரமான இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும். தினமும் சுமார் 600 ஆடுகள் அறுக்கப்படும் என்பதால், இதனை சுத்தம் செய்யும் போது 30 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வெளியேறும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ரூ.25 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன ஆடு அறுக்கும் மையம் விரைவில் திறக்கப்படும். நெல்பேட்டையிலுள்ள மாநகராட்சி ஆடு வதை நிலையம் அனுப்பானடிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமை பொறியாளர் சக்திவேல், சுகாதார அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

3 நிமிடத்தில் தோல், இறைச்சி உறுப்புகள் தனியாக பிரிப்பு