Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பு

Print PDF

தினமணி 27.07.2010

மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி மீண்டும் தனியார் வசம் ஒப்படைப்பு

சேலம், ஜூலை 26: சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதை நிர்வாகம் மீண்டும் தனியார் வசம் ஒப்படைத்துள்ளது. சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஊழியர்களுக்கான கருவிகளை மேயர் ரேகா பிரியதர்ஷிணி வழங்கி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 2, 7, 12, 15, 16, 18, 19, 23, 24, 25 உள்ளிட்ட 21 வார்டுகளில் கடந்த 3 ஆண்டுகளாக சுவச்தா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் குப்பை அள்ளும் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்ததை அடுத்து கடந்த சில வாரங்களாக மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களே இந்த வார்டுகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் 21 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து பேசப்பட்டது. அப்போது ஆளும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சுகாதாரப் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பி. என்ற தனியார் நிறுவனத்துக்கு குப்பை அள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

அப்போது மேயர் கூறியது:

அரசு கொள்கைப்படி மாநகராட்சிகளில் 3-ல் ஒரு பங்கு வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு தனியார் வசம் வழங்கப்பட வேண்டும்.

அதன்படி சேலம் மாநகரில் 21 டிவிஷன்களில் குப்பைகள் அள்ளும் பணி மீண்டும் தனியார் வசம் வழங்கப்பட்டுள்ளது. மாநகரை தூய்மையாக வைத்திருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் தேவை என்றார் அவர்.

இது குறித்து தனியார் நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, எங்கள் நிறுவனம் பெங்களூருவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதில் சிறந்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. சேலத்திலும் சிறப்பாக பணியாற்றுவோம்.

இதற்காக 770 பணியாளர்களும் காலை 6 முதல் 11 மணி, பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 மணி என்ற இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்வார்கள்.

பஸ்நிலையம், மார்க்கெட் பகுதிகளில் இரவு 10 முதல் அதிகாலை 2 மணி வரை துப்புரவுப் பணிகள் நடைபெறும். சுகாதாரப் பணிகளில் 22 ஆட்டோக்கள், 26 லாரிகள் ஈடுபடுத்தப்படும் என்றனர்.