Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடுகள், பள்ளிகளில் சுகாதாரத்துறை ஆய்வு

Print PDF

தினகரன் 29.07.2010

வீடுகள், பள்ளிகளில் சுகாதாரத்துறை ஆய்வு

மார்த்தாண்டம், ஜூலை 29: குமரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் தலைமையில் நேற்று குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குட்டக்குழி, இடைக்கோடு, ஏழுதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அவர் பார்வையிட்டார்.

கடலோர பகுதிகளிலும் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டார். எல்லையோர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவிலான மருந்து களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று துணை இயக்குனர் மதுசூதனன் பணியாளர்களை கேட்டுக் கொண்டார். மேலும் குமரி & கேரள எல்லை பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தங்கியுள்ள கேரள மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டார்.

குழித்துறை நகராட்சியில் கொசு மருந்து ஒழிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் முன்னிலையில், நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி கொசு ஒழிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றிய விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ரத்த பரிசோதனை செய்யப்பட்டதா, அதன் முடிவு என்ன? என்பன போன்ற விவரங்களை சுகாதாரத்துறை கள ஆய்வு பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

குழித்துறை நகராட்சியில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.