Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இறைச்சி கழிவால் சுகாதாரக்கேடு:எரிஉலை அமைக்குமா மாநகராட்சி

Print PDF

தினமலர் 02.08.2010

இறைச்சி கழிவால் சுகாதாரக்கேடு:எரிஉலை அமைக்குமா மாநகராட்சி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் கோழி இறைச்சி கழிவுகள் ரோட்டோரங்களில் கொட்டப்படுகின்றன. மாநகராட்சியுடன் இணைக்க உள்ள ஊராட்சி பகுதிகளுக்கும் சேர்த்து, இறைச்சி கழிவை அப்புறப்படுத்த முறையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.திருப்பூர் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனை கடைகள் அதிகம் உள்ளன. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இறைச்சி விற்பனை கடைகளும் ஆங்காங்கே தினமும் புதிதாக முளைத்து வருகின்றன. இதற்கு உரிமம் வழங்குபவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள்.ஆனால், உரிமம் பெற்ற கடையில் இருந்து கோழி இறைச்சிக்கழிவுகள் முறையாக அகற்றப் படுகிறதா என்பது கண்காணிக்கப்படுவதில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன், கோழி இறைச்சி விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு நடத்தியது.இதில், இறைச்சி கழிவை சாக்கடை, ரோட்டோரங்களில் கொட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிப்பதுடன், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், ஆங்காங்கே இறைச்சி கழிவுகள், கோழி இறகுகள் கொட்டப்படுவது தொடர்கிறது.காற்றில் பறக்கும் கோழி இறகுகள், பொது சுகாதாரத்துக்கு அறைகூவல் விடுகின்றன. அழுகி துர்நாற்றம் வீசும் இறைச்சி கழிவுகள் தெருநாய்களால் குதறப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குள் மட்டுமின்றி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகள் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளிலும் இறைச்சி கழிவுகளை பாதுகாப்பின்றி கொட்டுவது தொடர்கிறது; ரோட்டோரங்களிலும் கொட்டி விடுகின்றனர்.இதற்கு மாற்று நடவடிக்கையாக, தற்போதைய மாநகராட்சி மற்றும் விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சி எல்லைகளை உள்ளடக்கி, கோழி இறைச்சி விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.ஒட்டுமொத்தமாக அனைத்து கோழி இறைச்சி கழிவுகளையும், எரித்து அப்புறப்படுத்த எரி உலை (இன்சினரேட்டர்) அமைக்க வேண்டும். அனைத்து இறைச்சி கழிவுகள் எரி உலை மூலமே அகற்றப்பட வேண்டும். இதேபோல், மாநகராட்சி பகுதிகளில் தெருநாய் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ரோட்டோர இறைச்சி கழிவை தின்னும் நாய்கள், புதுத்தெம்புடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.