Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிப்பிடம் பராமரிக்க ஓசோன் தொழில்நுட்பம் தூய்மை நகராகிறது கோவை

Print PDF

தினகரன் 10.08.2010

கழிப்பிடம் பராமரிக்க ஓசோன் தொழில்நுட்பம் தூய்மை நகராகிறது கோவை

கோவை, ஆக. 10:கோவை மாநகரில், 130 கழிப்பிடங்களை ஓசோன் தொழில்நுட்பத்தில் சுத்தமாக பராமரிக்கும் பணி நேற்று துவங்கியது.

கோவை நகரில் மைக்ரோ ப்யூர் டெக்னாலஜி நிறுவனம் மூலமாக மாநகராட்சி கழிப்பிடங்களை சுத்தமாக பராமரிக்க திட்டமிடப்பட்டது. ஓசோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்யும் திட்டத்தை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் வெங்கடாசலம் நேற்று துவக்கி வைத்தார். இதில் கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள் செல்வராஜ், பைந்தமிழ், கவுன்சிலர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது;

மாநகரில் கழிப்பிடங்களை சுத்தமாக, சுகாதாரமாக வைக்க இந்த திட்டம் துவங்கியுள்ளது. நகரில் 150 கழிப்பிடங்கள் இருக்கிறது. தனியார் நிறுவனம் மூலம், 130 கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படும். இதற்கு நடப்பாண்டிற்கு 87 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு ஒரு பராமரிப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மேற்பார்வையாளர்கள், கழிவு நீர் தடை சரி செய்ய ஒரு பிளம்பர், மின்சாரம், மோட்டார், மின் விளக்கு குறைபாடுகளை களைய மின் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓசோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிருமிகளை நீக்கம் செய்யப்படுகிறது, கூடுதல் வசதியாக குப்பை தொட்டி, எமர்ஜென்சி விளக்கு, அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. பொது கழிப்பிடம் சுத்தம் குறித்து விவரம் அறிய தொடர்பு எண் பதிவு செய்யப்படும்.

பராமரிக்க தேவையான வேதிப்பொருட்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தகவல் பலகையில் கழிவறை சுத்தம் செய்த தேதி, கழிவு நீர் தொட்டி, தண்ணீர் தொட்டி போன்றவை சுத்தம் செய்த நேரங்கள் குறிப்பிடப்படும். தொடர்பு எண்களில் புகார் தரலாம். பெண் கழிவறைகளில் குப்பை போட கூடை அமைத்து பாதுகாப்பாக வெளியேற்றப்படும். கைகளை சுத்தம் செய்ய சோப், ஆயில் வழங்கப்படும். சுகாதாரம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கழிவறை சுவர்களில் விழிப்புணர்வு தொடர்பான சித்திரம், சுவரொட்டி வைக்கப்படும். புதிய இணைய தளம் துவக்கப்பட்டு அதில் புதிய மாற்றங்களை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டண கழிப்பறைகளில் இதில் பராமரிக்கப்படமாட்டாது. பஸ் ஸ்டாண்ட், பொது இடங்களில் உள்ள இலவச கழிப்பிடங்கள் மட்டுமே பராமரிக்கப்படும். விரைவில் அனைத்து மண்டலத்திலும் இலவச கழிப்பிடங்கள் தனியார் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக் கப்படும். பழுதடைந்த இலவச கழிப்பிடங்கள் சீரமைக்கப்படும். கோவை நகரை கிளீன் சிட்டியாக மாற்றும் வகையில் திட்டம் உள்ளது. இவ்வாறு அன்சுல்மிஸ்ரா கூறினார்.

திட்டம் துவங்கியது

ஓசோன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு மேம்பாட்டு பணிகளை மேயர் வெங்கடாசலம் நேற்று துவக்கி வைத்தார். அருகில் கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, துணைமேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள் பைந்தமிழ்பாரி, செல்வராஜ்.