Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு பரவலை தடுக்க கொசு ஒழிப்புக்கு சிறப்பு ரயில்

Print PDF

தினகரன் 11.08.2010

டெங்கு பரவலை தடுக்க கொசு ஒழிப்புக்கு சிறப்பு ரயில்

புதுடெல்லி, ஆக. 11: டெல்லியில் கொசுக்களை ஒழிப்பதற்காக கொசு ஒழிப்பு சிறப்பு ரயில் விரைவில் விடப்பட உள்ளது. நவம்பர் வரையில் இந்த ரயில் டெல்லியில் ஓடும்.

டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் அக்டோபர் மாதத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு உஷார் நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

கழிவுநீர் தேங்கியதன் மூலம் கொசுக்களை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது. கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களுடன் கூடிய வாகனங்கள், கைகளால் இயக்கும் கொசு மருந்து இயந்திரங்களை ஸி3 கோடி செலவில் மாநகராட்சி வாங்கியுள்ளது.

கொசு ஒழிப்பு முயற்சியின் அடுத்த கட்டமாக, டெல்லியில் உள்ள நீர்நிலைகளில் கொசுக்களை ஒழிப்பதற்காக வடக்கு ரயில்வேயுடன் மாநகராட்சி கைகோர்த்துள்ளது. கொசு ஒழிப்பு சிறப்பு ரயில் மூலம் நீர்நிலைகளில் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொசு ஒழிப்பு சிறப்பு ரயிலில் தாழ்வான பெட்டியில் ஒரு லாரி இருக்கும். அந்த லாரியில் கொசு மருந்து அடிக்கும் மிகப்பெரிய எந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எந்திரத்தின் மூலம், தண்டவாளத்தையொட்டியுள்ள நீர்நிலைகளில் கொசுமருந்து பீய்ச்சி அடிக்கப்படும். தண்டவாளத்தின் இருபுறங்களிலும் 50 முதல் 60 மீட்டர் வரையிலான பரப்புக்கு நீர்நிலைகளில் கொசு மருந்தை இயந்திரம் பீய்ச்சியடிக்கும்.

புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து டெல்லி ஷாதரா, ஆனந்த்விகார் முனையம் வழியாக ஹசரத் நிஜாமுதீன் வரையில் இந்த கொசு ஒழிப்பு ரயில் இயக்கப்படும். அதன்பிறகு, லஜ்பத் நகர், சப்தர்ஜங், படேல் நகர் ஆகிய ரிங் ரயில் நிலையங்கள் வழியாகவும் இந்த ரயில் இயக்கப்படும்.

இதுதவிர, புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து ஆதர்ஷ் நகர், பத்லி வழியாக நரேலா அருகில் உள்ள ரத்தானா வரையிலும் இந்த கொசு ஒழிப்பு ரயில் இயக்கப்படும். அங்கிருந்து அசோக் நகர், லாரன்ஸ் ரோடு வழியாக புதுடெல்லிக்கு ரயில் திரும்பும். இந்த ரயில் நவம்பர் மாதம் வரை 15 நாட்களுக்கு இருமுறை இயக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்

.

Last Updated on Wednesday, 11 August 2010 06:07