Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மதுரையை தூய்மையாக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'

Print PDF

தினமணி 11.08.2010

"மதுரையை தூய்மையாக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை'

மதுரை, ஆக. 10: மதுரையை தூய்மையாக்கும் மாவட்ட நிர்வாகத்தின் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் சி.காமராஜ் வலியுறுத்தினார்.

மதுரை மாவட்டம், யா ஒத்தக்கடையில் "தூங்கா மதுரையை தூய்மையாக்குவோம்' திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

இத்திட்டத்தின் கீழ் இதுவரை பாலரெங்காபுரம் மருத்துவமனை, அரசு ராஜாஜி மருத்துவமனை, கோமதிபுரம் மேலமடை பஞ்சாயத்து, அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதுபோல, மதுரை மாவட்டத்தின் முக்கியப் பகுதியான யா ஒத்தக்கடையில் தூய்மைப்பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ஒத்தக்கடை ஊராட்சிமன்றம், எஸ்.வி.என். நற்பணி மன்றம், நேரு யுவகேந்திரா, நண்பன் அறக்கட்டளை, மீனாட்சி மருத்துவமனை கல்லூரி, ஒத்தக்கடை வியாபாரிகள் சங்கம், ஒத்தக்கடை எவர்சில்வர் தொழிலாளர் சங்கம், அரசு மேனிலைப் பள்ளி மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது.

ஒத்தக்கடை பகுதியில் கோழிக் கழிவுகளைக் கொட்டுவது, சாலை ஓரங்களில் ஆடுகளை வதை செய்வது, குப்பைகளை கண்ட இடங்களில் போடுவது, வாய்க்கால், கழிவுநீர் சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களை வீசி எரிவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் இனி எவரும் 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது.

டீக்கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்குப் பதிலாக, காகித டம்ளர்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சாக்கடைகளில் பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கிநின்று கொசு உற்பத்தியாக ஏதுவாகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருள்களை கால்வாய், சாக்கடைகளில் வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மதுரை மாவட்டத்தில் யா ஒத்தக்கடை முழு சுகாதார முன்மாதிரி கிராமமாக உருவாக பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார் ஆட்சியர்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்கத் தலைவர் டாக்டர் புகழகிரி வடமலையான், ஒத்தக்கடை ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.பி.பூபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பெருமாள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியச் செயற்பொறியாளர் கிருஷ்ணராம், வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.