Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் மாநகரில் கலப்பட பொருட்கள் விற்ற 25 கடைகள் மீது வழக்குப்பதிய நடவடிக்கை

Print PDF

தினமணி 11.08.2010

திருப்பூர் மாநகரில் கலப்பட பொருட்கள் விற்ற 25 கடைகள் மீது வழக்குப்பதிய நடவடிக்கை

திருப்பூர், ஆக.10: மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் திருப்பூர் மாநகரப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் எடுக்கப்பட்ட 77 உணவு மாதிரிகளில், 25 மாதிரிகள் கலப்படம் என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. கலப்பட பொருட்கள் விற்ற கடைகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மாநகரப் பகுதியிலுள்ள ஹோட்டல்கள், எண்ணெய் கடைகள், மளிகை, பேக்கரி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை நடத்தப்பட்ட ஆய்வில், கலப்படம் எனக் கருதப்பட்ட 77 உணவுப் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த உணவுப் பொருட்கள் ஓசூரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஓசூர் உணவுப் பொருட்கள் பரிசோதனை மையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செவ்வாய்க்கிழமை வரப்பெற்றிருந்த முடிவுகளில், 25 உணவுப் பொருட்கள் கலப்படம் என ஊர்ஜிதமாகியுள்ளன. இதையடுத்து, கலப்பட உணவுப் பொருட்களை விற்ற கடைகள் குறித்த அறிக்கை, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உணவுப் பொருட்கள் தடுப்புச் சட்ட இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். இணை இயக்குநரின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.ஆர்.ஜவஹர்லால் தெரிவித்தார்.

இதேபோல், கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது கலப்பட பொருட்கள் விற்றதாக ஊர்ஜிதம் செய்யப்பட்ட 25 கடைகள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.