Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான மோர்,தயிர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 11.08.2010

நெல்லை மாநகராட்சியில் அதிகாரிகள் திடீர் சோதனை: காலாவதியான மோர்,தயிர் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருநெல்வேலி, ஆக.10: திருநெல்வேலி நகரத்தில் உள்ள குளிர்பானக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர். இதில் காலாவதியான மோர்,தயிர்,ரஸ்னா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருநெல்வேலி மாநகர் பகுதியில் காலாவதியான மற்றும் போலியான குளிர்பான பொருள்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் என்.சுப்பையனுக்கு அதிகமான புகார்கள் சென்றன. இதையடுத்து ஆணையர், குளிர்பான கடைகளில் திடீர் சோதனை செய்து, காலாவதியான குளிர்பான பொருள்களை பறிமுதல் செய்யுமாறு சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி மாநகராட்சி உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் அரசகுமார், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மணிமுருகன்,சந்திரமோகன்,ராமகிருஷ்ணன் ஆகியோர் திருநெல்வேலி நகரத்தில் உள்ள குளிர்பானக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனை சந்தி விநாயகர் கோயில் பகுதி, தெற்கு ரதவீதி, கீழரதவீதி,மேல ரதவீதி, தெற்கு மவுண்ட் ரோடு ஆகியப் பகுதிகளில் உள்ள சுமார் 25 குளிர்பானக் கடைகளில் நடத்தப்பட்டது. இதில் காலாவதியான மோர்,தயிர் பாக்கெட்டுகள்,போலி ரஸ்னா பாக்கெட்டுகள் என மொத்தம் ஆயிரம் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 ஆயிரமாகும். இந்த பொருள்கள் உடனடியாக அழிக்கப்பட்டன.

இக் கடைகளின் உரிமையாளர்களிடம், காலாவதியான பொருள்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் 1,500 பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்ற சோதனை இனி அடிக்கடி நடத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் நகரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.