Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"வீட்டைபோல் வீதியையும் சுத்தமாக வைத்திருங்கள்'

Print PDF

தினமணி 13.08.2010

"வீட்டைபோல் வீதியையும் சுத்தமாக வைத்திருங்கள்'

புதுச்சேரி, ஆக. 12: புதுச்சேரி நகராட்சி சார்பில் தீவிர துப்புரவு வார விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி, அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை நடந்தது.

இதில் முதல்வர் வி.வைத்திலிங்கம் கலந்து கொண்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கினார்.

துண்டு பிரசுரத்தில் உள்ள விவரம்:

உங்கள் வீóட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறீர்களோ, அதைப்போல் வீதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீதிக்கு ஒரு குழு அமைத்து தமக்கு தாமே தங்கள் வீதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை, மக்கும் மற்றும் மக்கா குப்பை என்று தனித் தனியே பிரித்து பைகளில் சேகரித்து, துப்புரவு ஊழியர்கள் வரும்போது கொடுக்க வேண்டும்.

ஒருபோதும் குப்பைகளை வீதியில் கொட்டக்கூடாது. கட்டட கட்டுமான பொருள்களை போக்குவரத்துக்கு இடையூறாகவும், கழிவுநீர் செல்ல தடையாகவும் இருக்கும் விதத்தில் வீதிகளில் கொட்டக்கூடாது. இடிக்கப்பட்ட கட்டட பொருள்களை உடனுக்குடன் தங்கள் சொந்த செலவிலேயே அப்புறப்படுத்துதல் வேண்டும்.

டீக்கடைகளிலோ, பொது இடங்களிலோ, காபி, டீ அருந்திய கோப்பைகளை அட்டை பெட்டியில் சேகரித்து வைத்து, துப்புரவு ஊழியர் வரும்போது ஒப்படைக்க வேண்டும். மக்கும் தன்மையற்ற மெல்லிய பிளாஸ்டிக் பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு, கழிவுநீரோடையில் அடைப்பு ஏற்படவும், அதனால் கொசு உற்பத்திக்கும் காரணமாகிறது. அதனால் மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களை அறவே தவிர்த்தல் வேண்டும் என்று துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரம் விநியோக நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான், உள்ளாட்சித்துறை அமைச்சர் எ.நமச்சிவாயம், நகர்மன்றத் தலைவி பி.ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர் டி.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.