Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு பாதிப்பு 254 ஆனது நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் குழு

Print PDF

தினகரன் 17.08.2010

டெங்கு பாதிப்பு 254 ஆனது நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் குழு

புதுடெல்லி, ஆக. 17: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. நோய்ப் பரவலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாநில சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சுகாதாரத்துறை அமைச்சர் கிரண் வாலியா கேட்டுக் கொண்டுள்ளார். நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்காக அதிகாரிகள் குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 பேர் டெங்கு அறிகுறிகளுடன் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

இவர்களையும் சேர்த்து இந்த சீசனில் (ஜூனில் இருந்து) டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி சுகாதார அலுவலர் என்.கே.யாதவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஜாமியா நகரைச் சேர்ந்தவர்கள் டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியை கவனிப்பதற்கென நோய் தடுப்பு நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

இதனிடையே, டெங்குவின் தாக்கம் தீவிரமானதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் கிரண் வாலியா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாநில சுகாதாரத் துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கிரண் வாலியா கேட்டுக்கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி க்கை அதிகரித்து வருவதற்கு, காமன்வெல்த் போட்டி கட்டுமானப் பணிகளும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மைதானப் பணிகள் நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழை நீர் தேங்கியுள்ளதால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநில மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் குழுவை கேட்டுக் கொண்டுள்ளேன். நோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை அக்குழுவினர் வழங்குவார்கள். இதுதவிர, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கி விடும்படி சுகாதாரத் துறை செயலாளர் ராஜேந்திர குமாரையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

டெங்குவால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தீவிரமாக கவனித்து வருகிறேன். டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதேவேளையில், வீட்டையும் பொதுமக்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்களை உற்பத்தி பண்ணும் வகையில் கழிவுநீரை வீடுகளில் தேங்க விடக்கூடாது. இவ்வாறு கிரண் வாலியா கூறினார்.