Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை நகரமாக மாறிய கூடலூர்

Print PDF

தினமலர் 18.08.2010

குப்பை நகரமாக மாறிய கூடலூர்

பந்தலூர்:கூடலூர் குப்பை நகரமாக மாறி துர்நாற்றம் வீசி வருவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் - கேரளா - கர்நாடக மாநிலங்களின் முக்கிய சந்திப்பு பகுதியாகவும், சுற்றுலா பயணிகள் வரக்கூடிய முக்கிய நுழைவாயிலாகவும் கூடலூர் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி சமீபகாலமாக குப்பைகளால் சூழப்பட்டுள்ளது. கூடலூர் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பை அங்குள்ள தனியார் எஸ்டேட்டுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து தேவசோலை பேரூராட்சிக்குட்பட்ட செலுக்காடி பகுதியிலுள்ள வருவாய் துறைக்குட்பட்ட இடத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. ஆனால், அங்கும் குப்பை கொட்ட அப்பகுதி மக்களும், பேரூராட்சி நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால், அந்த இடத்தை வருவாய் துறையினர் பெற்றுதர வேண்டும் என கூடலூர் நகராட்சியில் அவசரக்கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை வருவாய் துறையினர் ஆய்வு செய்து, "குப்பை கொட்ட இப்பகுதியை வழங்கலாம்,' என பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இது குறித்து கண்டுக்கொள்ளாத நிலையில், கடந்த 5 நாட்களாக கூடலூர் நகரில் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே குவிந்துள்ளன. நகராட்சியில் 5 குப்பை லாரிகள் உள்ள நிலையில், குப்பைகளை வாரி சென்று வேறு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏற்பட்டுள்ள கடும் துர்நாற்றம் கூடலூர் நகர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொற்று நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது. இதனை தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்.