Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு ஆசாத் உத்தரவு

Print PDF

தினகரன் 20.08.2010

டெங்கு பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு ஆசாத் உத்தரவு

புதுடெல்லி, ஆக.20: டெல்லியில் டெங்கு காயச்சல் பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியாவதை தடுத்து நிறுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பித்து விட்டது. டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசுதான். டெல்லியில் பல இடங்களில் கழிவு நீர் தேங்கியிருப்பதாலும், கட்டுமான கழிவுகள் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளதாலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

டெல்லியில் இதுவரை 297 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4 பேர் இறந்துள்ளனர் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனினும், தனியார் மருத்துவமனைகள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகம் கூறுகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். கொசு அதிகளவில் உற்பத்தியாவதால்தான் டெங்கு காய்ச்சல் பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய தொற்று நோய் கட்டுப்பாடு மையம், கொசுக்கள் மூலம் பரவும் நோய் கட்டுப்பாடு திட்டம்,, மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவை ஆசாத் நியமித்துள்ளார்.

டெல்லியில் டெங்கு பரவுவதை தடுக்க கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளுக்கு அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்என்று ஆசாத் கேட்டு கொண்டார்