Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை, எட்டயபுரத்தில் தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினகரன் 24.08.2010

நெல்லை, எட்டயபுரத்தில் தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

நெல்லை, ஆக. 24: தமிழகம் முழுவதும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், மேலப்பாளையம் உதவி வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் ஷாகுல் ஹமீது, அரசகுமார், இசக்கிமுத்து, முருகேசன், துப்புரவு ஆய்வாளர்கள் பரமசிவம், வேலாயுதம், ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் புதிய பஸ் நிலைய கடைகளில் உள்ள அழுகிய பழங்கள், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள், கலப்பட தேயிலை பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் புதிய பஸ் நிலையத்தில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டன. ஒரு வாகனத்திற்கு ரூ.50 செலுத்தி உரிமையாளர்கள் வாகனத்தை மீட்டு சென்றனர்.

இச்சோதனை காரணமாக புதிய பஸ் நிலையத்தில் மேலப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எட்டயபுரம்: கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரால்ப் செல்வின் உத்தரவின்பேரில் கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மோசஸ்பால் தலைமையில் எட்டயபுரம் பேரூராட்சி உணவு ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் முருகராஜ், கோபாலகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான உணவு பொருட்கள், குடிநீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், தேதி குறிப்பிடப்படாத பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.