Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் சுகாதாரமின்றி விற்பனை அதிகாரிகள் அதிரடி ரெய்டு 50 கிலோ இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன் 30.08.2010

மாநகரில் சுகாதாரமின்றி விற்பனை அதிகாரிகள் அதிரடி ரெய்டு 50 கிலோ இறைச்சி பறிமுதல்

ஈரோடு, ஆக. 30: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கறிகடைகளில் நேற்று நடத்திய திடீர் ரெய்டில்சுகாதாரமின்றி விற்பனை செய்த 50 கிலோ பழைய ஆட்டிறைச்சியை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரமின்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து நேற்று காலை மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) தங்கராஜ் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.

நாச்சியப்பா வீதி, இடையங்காட்டுவலசு, மாதவகிருஷ்ணா வீதி, சூரம்பட்டி நால் ரோடு போன்ற பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி, கோழி கடைகளில் திடீர் ரெய்டு நடந்தது. சோதனையின் போது பெரும்பாலான ஆட்டிறைச்சி கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களின் அனுமதியின்றியும், இறைச்சிக்கு சீல் வைக்காமலும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சில இடங்களில் பழைய, சுகாதாரமற்ற இறைச்சியும் விற்பனைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஒருசில இறைச்சி கடைக்காரர்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து அக்கடைகளில் இருந்து இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மாநகராட்சி ஆடு வதை நிலையத்தில் ஆட்டை அறுத்து அதற்கு சீல் வைத்த பிறகே கறிக்கடைகளில் ஆட்டிறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என்றும், மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். இதேபோன்று சுகாதாரமற்ற முறையில் கோழிகளை அறுத்து அவற்றை சுத்தம் செய்யும் கடைக்காரர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனர். 25க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் நடத்திய திடீர் ரெய்டில் 50 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

ரெய்டு குறித்து மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) தங்கராஜ் கூறுகையில், ‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்பவர்கள் தாங்கள் விற்பனை செய்யும் இடத்திலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் கட்டாயம் ஆடுகளை மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் வெட்டி, சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதனையிட்டு விற்கத் தகுதியுள்ளவை என சான்று அளித்தப்பிறகே இறைச்சியை விற்க வேண்டும்.

சுகாதாரமில்லாத ஆடுகளை வெட்டி விற்பனை செய்தாலோ, பழைய கறியை ஸ்டாக் வைத்து விற்றாலோ சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைக்கும் சீல்வைக்கப்படும். இந்த திடீர் ரெய்டு மீண்டும் தொடரும்என்றார்.