Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலியான குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன்    30.08.2010

போலியான குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

வேலூர், ஆக.30: வேலூர் கஸ்பா பகுதியில் போலி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் கஸ்பா மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தருவிக்கப்பட்டிருந்தன. இந்த பாட்டிலை யதேச்சையாக கவனித்த மாநகராட்சி நல அலுவலர் கோவிந்தன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் விசாரித்தபோது, குடிநீர் பாட்டில்களை அங்கிருந்த கடையில் வாங்கி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மாநகராட்சி நல அலுவலர் கோவிந்தன், உணவு ஆய்வாளர் கவுரிசுந்தர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கஸ்பா பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனது வீட்டிலேயே கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து வாட்டர் பாக்கெட்டுகளையும், பாட்டில்களையும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களையும் மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அந்த பாட்டில்களிலும் பாக்கெட்டுகளிலும் முறையாக இருக்க வேண்டிய பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர்என்பதற்கு பதிலாக புளோரைஸ்டு வாட்டர் டிரிங்என்று இருந்ததும், போலியான ஐஎஸ்ஐ முத்திரை இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 24 குடிநீர் பாக்கெட் மூட்டைகளும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இனிமேல் இதுபோல் போலியான குடிநீர் விற்பது தெரிய வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறையான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் கேன்களையே விற்க வேண்டும் என்றும், மாநகராட்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அஜ்மலிடம் அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர முறையான நோட்டீசும் அவரிடம் அளிக்கப்பட்டது.

Last Updated on Monday, 30 August 2010 07:58