Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை பாதிப்பை கண்காணிக்க தயார் நிலையில் சுகாதார குழு

Print PDF

தினமலர் 30.08.2010

மழை பாதிப்பை கண்காணிக்க தயார் நிலையில் சுகாதார குழு

திருப்பூர்: மழை வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட, திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தினமும் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக, நொய்யல் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாக தரப்பில், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநகராட்சி பொறியாளர் திருமுருகன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு, இதற்கென நியமிக்கப்பட்டு உள்ளது. தினமும் ஒரு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் நான்கு துப்புரவு பணியாளர்கள் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை இரவு முழுவதும், மழை வெள்ள அபாயம் குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இரவு முழுவதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்; மழை வெள்ளம் குறித்த தகவல் வந்தால், உடனடியாக அப்பகுதிக்குச் சென்று அபாய தடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். இக்குழுவினர் செப்., 30ம் தேதி வரை இப்பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.