Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசு உற்பத்தியை கண்டுபிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களை வீட்டில் அனுமதிக்க பொதுமக்கள் மறுப்பு

Print PDF
 தினகரன் 02.09.2010

கொசு உற்பத்தியை கண்டுபிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களை வீட்டில் அனுமதிக்க பொதுமக்கள் மறுப்பு

புதுடெல்லி, செப். 2: கொசு மருந்து ஊழியர்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாள்கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள்தான் டெங்குவை பரப்பி வருகின்றன. அதனால், வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்கென சுமார் 4 ஆயிரம் தற்காலிக ஊழியர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. அவர்கள் வீடுதோறும் சென்று, கொசுக்கள் உற்பத்தியாகின்றதா? என்று சோதனையிடுகிறார்கள். அதனடிப்படையில், கொசுக்களை உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு அபராதத்தை மாநகராட்சி விதித்து வருகிறது. சோதனையிடும் வீடுகளில் கொசு ஒழிப்பு மருந்தையும் ஊழியர்கள் அடித்து விட்டு வருவார்கள்.

இதனிடையே சில பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க பொதுமக்கள் மறுத்து விட்டனர். இதுபற்றி மேயர் பிருத்வி ராஜ் சகானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மாநகராட்சி ஊழியர்கள் அவர்களது வேலையை பார்க்கிறார்கள். அவர்கள் வீடுகள் மட்டுமல்ல, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில்கூட கொசுக்கள் உற்பத் தியாகிறதா? என்று சோதனையிடுகிறார்கள்.

இந்த ஆண்டு டெங்கு தீவிரமாக பரவுவதற்கு காமன்வெல்த் போட்டி பணிகளும் ஒரு முக்கிய காரணமாகும். டெங்கு பரவலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டாயம் கட்டுப்படுத்திவிடுவோம். எனவே, டெங்கு ஒழிப்புப் பணியில் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பணிநிரந்தரம் செய்யக்கோரி செப்டம்பர் 6ம்தேதியில் இருந்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ள கொசு மருந்து ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் முடிந்தபிறகு அவர்களது பிரச்னைகள் களையப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.